ஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி

தஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று சிறைக்காவலர்கள் உட்பட குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டு மேலும் 29 கைதிகள் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் உறுப்பினர்களுடனான மோதலைத் தொடர்ந்தே இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெஷன்பேயில் இருந்து கிழக்காக 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வஹ்டாட்டில் போராளிகள் கத்திகளுடன் 3 சிறைக் காவலர்களையும் ஐந்து சக கைதிகளையும் கொன்றதை அடுத்த கலவரம் வெடித்ததாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலவரத்தை தூண்டியவர்களில் தஜிக் சிறப்புப் படையில் இருந்து விலகி ஐ.எஸ் உடன் இணைந்து சிரியாவில் கொல்லப்பட்ட குல்மரோத் கலிமுவ்வின் மகனும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரால் 24 கைதிகள் கொல்லப்பட்டு 1500 கைதிகள் இருக்கும் சிறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நீதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் தஜிகிஸ்தானில் இடம்பெற்ற மற்றொரு சிறைக் கலவரத்திற்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றது.

அந்தக் கலவரத்தில் 21 கைதிகள் மற்றும் இரு சிறைக்காவலர்கள் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடான தஜிகிஸ்தானில் 1,000க்கும் அதிகமானவர்கள் அண்மைய ஆண்டுகளில் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் குழுவினருடன் இணைந்ததாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டது.

இவர்களில் 2015 ஆம் ஆண்டு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரும் ஐ.எஸ் உடன் இணைந்து கொண்டுள்ளார்.

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை