பிரெஞ் பகிரங்க போட்டி நாளை ஆரம்பம்: 12-வது மகுடம் சூடுவாரா நடால்?

பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ரபெல் நடால். உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அவர் களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவர்.

இதன் காரணமாக 32 வயதான நடால் பிரெஞ் பகிரங்க பட்டத்தை 11 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.

அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சம்பியனாக இருந்தார்.

வேறு எந்த வீரரும் ஒரு கிராண்ட்சலாமில் இதுவரை அதிகமான பட்டம் வென்றது கிடையாது.

நாளை 26-ம் திகதி ஆரம்பமாக இருக்கும் பிரெஞ் பகிரங்க டென்னிசிலும் வெற்றி பெற்று நடால் 12-வது பட்டத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த இத்தாலி பகிரங்கம் டென்னிஸ் போட்டியில் அவர் முதல்நிலை வீரர் ஜோகோச்சை (செர்பியா) வீழ்த்தினார். இதன் மூலம் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

களிமண் தரையில் (கிளே) விளையாடுவதிலும் மன்னரான அவர் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ள கடுமையாக போராடுவார். நடால் ஒட்டு மொத்தமாக 17 கிராண்ட்சலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறையும், விம்பிள்டனை 2 தடவையும், அவுஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை 1 முறையும் வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட்சலாம் பட்டத்துடன் (அவுஸ்திரேலிய பகிரங்கம் 6+, பிரெஞ் பகிரங்கம் 1+, விம்பிள்டன் 8+ அமெரிக்க பகிரங்கம் 5) முதல் இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 15 கிராண்ட்சலாம் பட்டத்துடன் (அவுஸ்திரேலிய பகிரங்கம் 7+, பிரெஞ் பகிரங்கம் 1+, விம்பிள்டன் 4+, அமெரிக்க பகிரங்கம் 3) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நடாலின் பிரெஞ் பகிரங்க ஆதிக்கத்தை இந்த முறை தகர்க்க வேண்டும் என்ற வேகத்தில் ஜோகோவிச், பெடரர் உள்ளனர்.

இதேபோல் டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), டிஸ்டிபயாஸ் (கிரீஸ்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (ஆர்ஜென்டினா) போன்ற வீரர்களும் நடாலுக்கு சவாலாக விளங்கலாம்.

Sat, 05/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை