வங்கக்கடலில் 'Phani' புயல்

இலங்கைக்கு எச்சரிக்கை

28 முதல் 30 வரை கடும் மழை, காற்று வடமேற்கு திசையூடாக தமிழகத்தை தாக்கும்

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக விருத்தியடைந்து பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 950 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படும் அதேவேளை, இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் போது ஒரு சூறாவளியாக விருத்தியடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சூறாவளியானது 27,28,29,30ஆம் திகதிகளில் தென் தமிழ்நாட்டை நோக்கி நகரவுள்ளது. இதனால் 28 – 30 ஆம் திகதிகளுக்கு இடையில் கடும் காற்றுடன் கூடிய மழை செய்யும். சப்ரகமுவ, மேல், தென், வடமேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100 முதல் 150 மி.மீ. மழை பெய்யக்கூடும். காற்றின் வேகமானது 50 முதல் 70 கி.மீ. ஆக இருக்கும். பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கோரப்படுகின்றனர்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-,30 கிலோ மீற்றர் வரை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30ஆம் திகதி வட தமிழகம் - தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கி.மீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ​வங்கக்கடலில் உருவாகியுள்ள இப் புயலுக்கு ‘Phani’ புயல் எனபெயரிடப்பட்டுள்ளது. வங்காதேசம் இதற்கு பெயரிட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

 

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை