ஜனாதிபதி கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம்

அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.

அதேபோன்று தேவாலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பற்றிக் கேட்டறிந்த ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளை மிக விரைவில் மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான கொடூர செயற்பாடுகள் மீண்டும் நாட்டினுள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டதென்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்த ஜனாதிபதி, பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அருட் தந்தை ரவீன் சந்தசிறி பெரேரா உள்ளிட்ட அருட் தந்தையர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயத்தில் சமய கிரியைகளில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதையையும் செலுத்தினார்.

பிரதேசத்தில் உள்ள சில வீடுகளுக்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், அக்குடும்ப உறவினர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

Tue, 04/23/2019 - 16:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை