உதைபந்தாட்டப்போட்டியில் குருநகர் பாடும்மீன் சம்பியன்

ஏ தர கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் சென்.மேரிஸ் அணியை குருநகர் பாடும்மீன் அணி, 02:00என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. 

சாந்தன் மற்றும் கெயின்ஸ் ஆகியோரின் அபாரமான கோல்களின் உதவியுடன், சென்.மேரிஸ் அணியை இலகுவாக வீழ்த்தி குருநகர் பாடும்மீன் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. 

யாழ்ப்பாணக் கால்பந்தாட்ட லீக்கின் 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக, லீக்கிற்குட்பட்ட ஏ தர கழகங்களுக்கிடையில் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று  அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானம் மற்றும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றில் நடைபெற்றது. 

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு குருநகர் பாடும்மீன் அணியும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி, 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மைதானம் நிறைந்த ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்றது.  போட்டி ஆரம்பமான 5ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் அணிக்கு நல்ல வாய்ப்பொன்று கிடைத்தும் அதனை அவர்கள் பயன்படுத்தத் தவறினர். அதன் பின்னர் குருநகர் பாடும்மீன் அணியினர் தமது தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தனர். 26ஆவது நிமிடத்தில், பாடும்மீன் அணியின் சாந்தன் மிகவும் நேர்த்தியாக அபாரமான கோல் ஒன்றை அடித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக மூன்று சந்தர்ப்பங்கள் பாடும்மீன் அணிக்கு கிடைத்தும், அதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. 

முதற்பாதியாட்டம் அந்தக் கோலுடன் நிறைவுக்கு வந்தது. 

இரண்டாவது பாதியாட்டத்தில் சென்.மேரிஸ் அணி பதில் கோல் போடும் முனைப்பில் கடுமையாக ஈடுபட்டது. எனினும், பாடும்மீன் அணியின் பின்களத்தை அவ்வளவு எளிதாக அவர்களால் உடைக்க முடியவில்லை. இந்நிலையில், 79ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணியின் கெயின்ஸ் மிகச்சாதுரியமாக பந்தைக் கொண்டு வந்து கோல் கம்பத்துக்குள் புகுத்தினார். 

போட்டியின் 90ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் அணியின் வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

முடிவில் குருநகர் பாடும்மீன் அணி, 02:00என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. 

இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களாக கேசவன் சயந்தன், சுகிர்தன், முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

(கொக்குவில் குறுப் நிருபர்)

 

Sat, 04/06/2019 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை