கிழக்கில் துக்கதினம் ஹர்த்தாலாக்கப்பட்டுள்ளது

தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் கிழக்கு ஆளுநருக்கு தொடர்பென்ன?

கிழக்கு மாகாண ஆளுநருக்கும், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் இடையில் காணப்படும் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவேண்டியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு வடக்கு, கிழக்கில் துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு விடுத்த அழைப்பை, ஹர்த்தாலுக்கான அழைப்பாக அவர் மாற்றியிருப்பதாகவும் சுமந்திரன் எம்பி குற்றஞ்சாட்டினார்.

பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் சுகமடைய பிரார்த்திக்கின்றோம். உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற இந்த மோசமான சம்பவத்தில் ஏற்பட்ட இழப்பு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.

அதேநேரம், குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக வடக்கு, கிழக்கில் சோகதினத்தை அனுஷ்டிக்குமாறு நாம் கோரிக்கைவிடுத்தோம். இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரிடமும் கோரினோம். எனினும், அவர் அதனை ஹர்த்தாலாக அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது ஹர்த்தாலுக்கான அழைப்பு அல்ல. அவர் திரிபுபடுத்தியுள்ளமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவருக்கும் தேசிய தௌபீக் ஜமாஆத் அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக கேள்விகள் எழும்பியுள்ளன.

இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும். இந்தக் குழுவினருக்கும் அரசியல் வாதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகள் விசாரிக்கப்பட வேண்டும். குறித்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2017ஆம் ஆண்டே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை