நெய்மாருக்கு 3 போட்டிகளில் தடை

சம்பியன்ஸ் லீக் தொடரில் மென்செஸ்டர் யுனைடெட் அணியிடம் தோல்வியடைந்த போட்டியில் போட்டி அதிகாரியை அவமதித்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி முன்கள வீரர் நெய்மாருக்கு மூன்று ஐரோப்பியப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் கடைசி நேரத்தில் தொலைக்காட்சி உதவி நடுவர் முறை மூலம் நடுவர் டமிர் ஸ்கொமினா வழங்கிய பெனல்டி முடிவு “வெட்ககரமானது” என்று சமூகத்தளத்தில் பிரேசிலின் நெய்மார் குறிப்பிட்டிருந்தார்.

காயத்திற்கு உள்ளான நெய்மார் யுனைடெட் அணிக்கு எதிராக தனது அணி 3–1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்த போட்டியில் பார்வையாளராகவே இருந்தார்.

இந்நிலையில் அடுத்த பருவத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலை போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மார்கஸ் ரஷ்போல்ட் பெற்ற பெனல்டி கோல், “பெனல்டியாக இருக்கவில்லை” என்று நெய்மார் குறிப்பிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டகிராம் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “இது வெட்ககரமானது. தொலைக்காட்சியில் மெதுவான நகர்வு மூலம் மீண்டும் அதே விடயத்தைப் பார்ப்பது பற்றி நான்கு நபர்களுக்கு எதுவுமே தெரியவில்லை” என்றார்.

குறித்த காட்சியை மீண்டும் பார்த்த நடுவர் பந்து பாரிஸ் ஜெர்மைன் பின்கள வீரர் பிரெஸ்னல் கிம்பம்பேவின் கையில் பந்து பட்டதாலேயே காயமுறிப்பு நேரத்தில் பெனல்டியை வழங்கினார்.

இதன் மூலம் 3–1 என்ற கோல்கள் கணக்கில் மார்ச் 6 ஆம் திகதி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுனைடெட் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

“அவர் பின்பக்கம் திரும்பியிருந்தபோது அவர் கையை என்ன செய்ய முடியும்?” என்று நெய்மார் கேள்வி எழுப்புகிறார்.

மூன்று மாதங்கள் உபாதைக்கு பின்னர் நெய்மார் கடந்த வாரம் நடைபெற்ற பிரான்ஸ் லீக் 1 போட்டியில் மொனாகோவுக்கு எதிரான ஆட்டத்தில் பதில் வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 3–1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை