நாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு

வனவளம் உட்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கத்தைப் போன்றே அனைத்து பிரஜைகளும் பொறுப்புடையவர்களாவரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்க்கப்படும் வனவள அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

திம்புலாகலை, வெஹெரகல மகா வித்தியாலயத்தில் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.  

நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும். நாட்டின் எஞ்சியுள்ள 28வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதுடன், அப்பிரதேசங்களில் நடைபெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டதாகவும் யுத்தம் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல் காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகி இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

அரசாங்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் நாட்டின் வன அடர்த்தியை 32வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48,000ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளதுடன் இதில் வருடம் ஒன்றுக்கு 15,000ஹெக்டேயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் தனியார்துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.  

மேலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த, அங்கவீனமுற்றவர்களுக்கும் சிங்கராஜ வனத்தில் இடம்பெற்ற மரபணு கொள்ளையை தடுப்பதற்காக பங்களிப்பு செய்த அதிகாரிகளையும் பாராட்டி சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. 

 

Fri, 03/22/2019 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை