இளைஞர், யுவதிகள் அனுபவங்களூடாக தலைமைத்துவத்தை பலப்படுத்த வேண்டும்

இளைஞர், யுவதிகள் அனுபவங்களூடாக தலைமைத்துவத்தை பலப்படுத்த வேண்டும். அதன் பொருட்டு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென்று பிரதமர் அலுவலக பிரதானி, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

'யொவுன்புர” நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு அமைச்சர் சாகல ரத்னாயக்க நேற்றுமுன்தினம் தெனியாய பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

இவ் விஜயத்தின் போது யொவுன்புர நிகழ்ச்சியில் இளைஞர், யுவதிகள் எதிர்கொள்ளும் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

இந் நிகழ்வின் ஓர் அங்கமான “யொவுன்புர” இளம் தலைவர்களுக்கு அமைச்சர் தலைமையில் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடைப்பெற்றது.

இங்கு உரையாற்றிய அமைச்சர்,

இன்றைய நாள் இளந்தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமான நாளாகும். இளம் தலைமுறையினருக்காக இவ்வாண்டு நடாத்தப்படும் ' யொவுன்புரய ' நிகழ்ச்சி திட்டத்தின் பொருட்டு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். இத்தலைவர்கள் தான் இவ்வேலைத்திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள முறையில் மாற்றமேதும் மேற்கொள்ள இயலுமா? என நான் தலைவரிடம் கேட்டேன். இந்நிகழ்ச்சி திட்டத்திற்கான ஏற்பாடுகள் 4 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. “யொவுன்புரவின்” உறுப்பினர்கள், தலைவர், செயற்பாட்டு அதிகாரிகள் அனைவரையும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தேர்வுச் செய்திருந்தால் இதன் மூலமாக சிறந்த பலாபலன்களை அடைந்திருக்கலாம்.

அதேபோல் “யொவுன்புரவின்” சிறப்பும் மேலோங்கியிருக்கும். நீங்கள் அனைவரும் இவ்வனைத்து செயற்பாடுகளுடனும் தொடர்புப்பட்டு செயற்பட்டு, பிரச்சினைகளை கையாளல் என்பன தொடர்பாக சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்வதுடன், இந்நிகழ்ச்சி வெற்றிகரமானதாக அமையும். நீங்கள் மிகவும் கடினமான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளீர்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொழுது பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றோம். இச்சவால்களை சமாளித்து 'யொவுன்புர' நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை