பிரபலமான ஆட்சியை விட விஞ்ஞானபூர்வ ஆட்சியே தேவை

 சப்பாத்து, சீருடை வழங்கி ஆட்சி செய்யும் நிலை மாற வேண்டும்

பிரபலமான ஆட்சியை விட விஞ்ஞான பூர்வமான ஆட்சியே நாட்டுக்கு அவசியமானது எனப் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.  

களுத்துறையில் நடைபெற்ற 'ஜனபியச' திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்: பிரபலமான ஆட்சிக்குப் பதிலாக விஞ்ஞானபூர்வமான ஆட்சியைக் கொண்டு வந்தால், நாட்டை விரைவாக மறுபக்கம் திருப்ப முடியும். எமது நாடு இந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு கீழ்த்தரமான ஜனநாயகவாதமே காரணம். நாம் சிறுவயதில் பல பிரபலமான வாக்குறுகளை கேள்வியுற்றோம். தற்பொழுது சப்பாத்து ஜோடியொன்று தருவதாகக் கூறுகின்றனர். சீருடைத்துணி, பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தொலைக்காட்சி, கைப்பேசி என்பவற்றை இலவசமாக தரப்போவதாகவும் எதிர்காலத்தில் சிலர் கூறலாம். அரசாங்கம் இவ்வாறு பயணிக்க முடியாது.எமது முதலீட்டுச் செலவை முன்னுரிமை அடிப்படையில் அடையாளங் காண வேண்டும். சுகாதாரத்துறையில் மருத்துவர்களை உருவாக்குவதா, தாதிகளை உருவாக்குவதா, சுகாதார ஊழியர்களை உருவாக்குவதா ? கல்வித்துறையில் என்ன செய்வது. சகல துறைகளிலும் விஞ்ஞானபூர்வமாக எதற்கு முன்னுரிமையளிப்பதென அடையாளங்கண்டு சரியாக முதலிட வேண்டும்.  

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக இன்னுமொரு விமான நிலையம் அமைக்க வேண்டுமென, 2006இல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்த குழு பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் மத்தளவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதியின் மாவட்டத்தில் தான் அனைத்தும் உருவாக்கப்பட்டது. கட்டுநாயக்கவில் மற்றொரு ஓடுபாதையை உருவாக்கியிருந்தால்,  மேலும் பல விமானங்கள் இங்கு வந்திருக்கும். ஆனால், மத்தளவில் விமான நிலையமல்லாது மீன்கடையே உருவாக்கப்பட்டது.  

மத்தள விமான நிலையம் 2018இல் 14மில்லியன் ரூபா வருமானமீட்டியது. ஆனால், இவ்விமான நிலையத்தை நிர்மாணிக்க 5,600மில்லியன்கள் செலவிடப்ட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதானால், சிறந்த விமான நிலையம் அவசியமாகும். பிரபலமான ஆட்சிக்கும் விஞ்ஞானபூர்வமான ஆட்சிக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே என்றும் அவர் குறிப்பிட்டார்.  (பா) 

Wed, 02/20/2019 - 08:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை