காங்கேசன்துறை, தலைமன்னாரிலிருந்து இந்திய கப்பல் சேவை

பூர்வாங்க பணிகள் உடன் ஆரம்பம்

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேவை

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாரிலிருந்து தென்னிந்தியாவுக்கான பயணிகள், சரக்குகள் கப்பற் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவின் பிரதான துறைமுகங்களுடனான இந்தக் கப்பல் சேவைகள், விரைவில் ஆரம்பிக்கப்படுமென கடந்தவாரம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். பிரதமர் வடக்கிலிருந்து கொழும்பு திரும்புவதற்கு முன்னதாகவே அவரது யோசனையைச் செயற்படுத்த அதிகாரிகள் துரிதமாகச் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

கப்பல் சேவையை ஆரம்பிக்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தலைமன்னார் துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளைத் துறைமுக அதிகார சபை அடுத்த சில தினங்களுக்குள் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டதும் அடுத்த கட்டப் பணியாக இந்தியா, இலங்கை ரயில் சேவையின் கூட்டுச் செயற்பாடுகள் குறித்து ஆராயும் நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இந்தியா- இலங்கைக்கு இடையில் ரயில் சேவையின் கூட்டுறவுச் செயற்பாடுகள் காணப்பட்டன. கொழும்பு கோட்டையிலிருந்து சென்னை வரையிலான ஒரே பயணச்சீட்டுடன் பயணிக்க முடிந்தது. அந்தச் சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து அரசு கூடுதல் கரிசனை செலுத்தி வருவதாக போக்குவரத்து அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கப்பல் சேவையும், ரயில்சேவையும் ஆரம்பிக்கப்பட்டால் பௌத்த மக்கள் இந்தியாவிலுள்ள பெளத்த மத வழிபாட்டுத் தலங்களுக்கான விஜயத்தை இலகுவாகவும், குறைந்த கட்டணத்திலும் மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படவுள்ளது.

இந்தக் கப்பல் பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க காங்கேசன்துறை, துறைமுகத் தின் இறங்கு துறை 167 மீற்றர் நீளமாகவும் 22 மீற்றர் அகலமாகவும் புனரமைக்கப்படவுள்ளது. இதனை நவீனமயப்படுத்த இந்தியா சலுகைக் கடனுதவியாக 45.27 மில்லியன் டொலரை வழங்கவுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை பழைய சீமெந்துத் தொழிற்சாலை பிரதேசத்தில் புதிய கைத்தொழில் பேட்டையை ஆரம்பிக்கவும், சுற்றுலா வலயமொன்றை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைமன்னார் துறைமுகப் பகுதியில் சுற்றுலா விடுதிகளையும், ஹோட்டல்களையும், பொதிகளை சேமிக்கும் களஞ்சியக் கட்டிடங்களை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை