த. தே. கூ. அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது

AMF

மட்டு- களுதாவளையில் அமைச்சர் விஜயகலாவினால் பாரிய அபிவிருத்திப் பணிகள் அங்குரார்ப்பணம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது. அது பதவிகளைப்பெற தோள் கொடுகவில்லை. அவர்களது கொள்கையும், வேண்டுகோளும், அரசியலமைப்பாகும். அவர்கள் கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறாதவர்கள் என கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன்தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பாரிய அபிவிருத்திப்ணிகள் நேற்று (9) கல்வி ராஜாங்க அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அந்நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டு - களுதாவளையில் நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளில் பிரதானமாக களுதாவளை மகாவித்தியாலயம் தேசியப்பாடசாலையாக தரமுயா்த்தப்பட்டது. அப்பாடசாலையில் மூன்றுமாடி கட்டிடத்தொகுதிக்கும், உள்ளக விளையாட்டரங்குக்கும் அவரால் அடிக்கல் நட்டிவைக்கப்பட்டதோடு, 850 மீட்டர் நீளமான களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கான காப்பற் வீதியும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயத்தின் பாரதி, விபுலானந்தர், நாவலர் ஆகிய இல்லங்களுக்கைிடையிலான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் எஸ். செந்தில்குமரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதற்கு பிரதம விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினா்களாக  மட்டக்களப்பு மாவட்ட முதன்மைப் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஜீ.ஸ்ரீநேசன், பிரதேச சபைத் தலைவர் ஜீ.யோகநாதன், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளா் திருமதி புள்ளநாயகம், பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெட்ணம், பழயை மாணவனும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளருமான வி. மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டனா்

அவ் விழாவுக்கு வருகை தருவதற்கு முன்பதாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்காக தனது முழு முயற்சியினால்  நிறைவேற்றப்பட்ட 850 மீட்டர் நீளமான காப்பற் பாதையை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வைபவம் ஆலய பரிபாலன சபைத்தலைவர் கே. வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் அதனை கையளித்தார். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதற்கான நினைவுப் படிகத்தை பாடசாலை வளாகத்தில்  திரைநீக்கம் செய்து வைத்தார். அதன் பிற்பாடு மூன்று மாடிக் கட்டிடத் தொகுதிக்கும், உள்ளக விளையாட்டரங்குக்குமான அடிக்கல்லை  நட்டிவைத்தார்.

அதனைத்  தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றும்போது, ஒரு மனிதனை ஆற்றலே ஆளுமைப்படுத்துகிறது, அதற்கு கல்வி அவசியம், "பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது" என்பது நமது ஆன்றோரின் வாக்கு. ஆதலால் கல்வி ஒரு சமூகத்திற்கு அத்தியாவசியமானது. அதற்கு நல்ல பாடசாலைகள் அவசியமானது. இன்று தரமுயர்த்தப்பட்ட தேசியப்பாடசாலை அந்தக் குறையைப் போக்கும். நான் இதனை நிறைவேற்றியிருக்கிறேன். அதற்கு உந்துதல் அளித்தவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். பாடசாலையும், அது  வழங்கும் கல்வியும் என்பவை ஒரு கூட்டு முயற்சி.

வடக்கிலும், கிழக்கிலும் பல பாடசாலைகள் பௌதீக வளங்களின்றி காணப்படுகின்றன. அதனை நிறைவேற்றிக் கொடுக்க நான் பாடுபட்டு வருகிறேன். தமிழ் மக்கள் சந்திரிகாவுக்கும், சிறிசேனவுக்கும் வாக்களித்து அவர்களுக்கு பதவியை கொடுத்தார்கள், ஏதாவது நல்ல காரியங்கள் அவர்களால், நமக்கு நடந்ததா? நடக்கவில்லை, செய்யக் கூடியவர்களுக்கு வாக்களியுங்கள். செய்யக் கூடியவர் இருக்கிறார். அவர்தான் ரணில் விக்கிரமசிங்க, அவருக்கு வாக்களியுஙகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது. அது பதவிகளைப்பெற தோள் கொடுகவில்லை. அவர்களது கொள்கையும், வேண்டுகோளும், அரசியலமைப்பாகும். அவர்கள் கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறாதவர்கள்.

இல்ல விளையாட்டுப் போட்டியில் பல வீர, தீரம் கொண்ட மாணவ சமூகத்தை நான் பார்த்தேன். அவர்கள் வளரவேண்டும், வாழ்வு வளம்பெற வேண்டும் என அவர்களை வாழத்துகிறேன். நான் களுதாவளைப் பிள்ளையாரின் பக்தை, உங்கள் நலனில் அக்கறை காட்டுவேன் என்றார்.

(புளியந்தீவு தினகரன் நிருபர் - தவபாலன்)

Sun, 02/10/2019 - 16:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை