மலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்

மலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச் சென்றிருப்பதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையகப் பகுதிகளில் தபால் ஊழியர்களுக்குக் காணப்படும் பற்றாக்குறை தொடர்பில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

மலையகப் பகுதிகளில் தபால் ஊழிகளுக்குக் காணப்படும் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கில் 2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 400 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தொழிலைவிட்டுச் சென்றிருப்பதால் தொடர்ந்தும் பற்றாக்குறை காணப்படுவதை ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையகப் பகுதிகளில் உள்ள மக்களின் கடிதப் பரிமாற்றங்களை இலகுபடுத்துவதற்கு புதிய தபால் பெட்டிகளை அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தபால் துறையில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் குறிப்பாக மலையகப் பகுதிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்று 2008ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 500 பேரை நியமிப்பதற்கும், இதில் முதற்கட்டமாக 400 பேருக்கு நியமனம் வழங்கவும் இணங்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன் 2008ஆம் ஆண்டில் 369 பேருக்கும், 2010ஆம் ஆண்டில் ஒருவருக்கும், 2011ஆம் ஆண்டில் 29 பேருக்கும், 2012ஆம் ஆண்டு ஒருவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2015ஆம் ஆண்டின் பின்னர் 100 பேருக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை