எதிர்க் கட்சித் தலைவர் பதவி மஹிந்தவுக்கே கிடைக்க வேண்டும்

ஜே.வி.பி எம்.பி விஜிதஹேரத் பேட்டி

'எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே கிடைக்க வேண்டும்' என்று கூறுகிறார் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.

கேள்வி: நாட்டில் காணப்பட்ட அரசியல் குழப்பம் தீர்த்து விட்டதாகக் கூறினாலும் உண்மையில் இன்னும் தீரவில்லை என உங்கள் கட்சி கூறுகின்றதல்லவா?  

பதில்: அரசியல் குழப்பம் தீர்ந்தாலும் அதிகாரக் குழப்பம் இன்னும் தீரவில்லை. அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் அதிகாரப் போட்டி இன்னும் தீரவில்லை. இருதரப்பாரின் மோதல்களும் முடிவுக்கு வரவில்லை. இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளன.  

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாகவும் பிரச்சினை தோன்றியுள்ளதல்லவா?  

பதில்: எதிர்க் கட்சியில் பெரும்பான்மை உள்ளவருக்கு பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும். அரசியலமைப்பின்படி தற்போது எதிர்க் கட்சியின் அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது முன்னணியேயாகும். அதன்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவி கிடைக்க வேண்டும். அதுதான் எமது நிலைப்பாடாகும்.  

கேள்வி: ஆனால் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலைமை உள்ளதாக உங்கள் கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளும் கூறியுள்ளன அல்லவா?  

பதில்: மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற குழுவினர் தொடர்பாக சில பிரச்சினைக்குரிய கதைகள் கூறப்படுகின்றன. அது சட்டத்தின் மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினையாகும். ஆனாலும் எம்முடைய நிலைப்பாடு மஹிந்த ராஜபக்ஷவுக்கே எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அரசியலமைப்பின்படி யாரேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன்னொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றால் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு மாதத்தில் ரத்தாகும். அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பொதுஜன பெரமுனவினதும் விடயமாம். பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பது தொடர்பாகவும் பேசப்படுகின்றது. ஆனால் அந்த பிரச்சினையும் அப்படியேதான் உள்ளது.  

கேள்வி: அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து கூறி வருகின்றது. எவ்வகையான தண்டனையை உங்கள் கட்சி எதிர்பார்க்கின்றது?  

பதில்: வழங்கப்படவேண்டிய தண்டனை என்னவென்பதை ஆணைக்குழுவே தீர்மானிக்கும். இந்த சூழ்ச்சி காரணமாக நாட்டிற்கு பாரியளவு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது. அதனால் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாம் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய பாராளுமன்றத்தில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென கூறுகின்றோம்.  

கேள்வி: அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த விடயம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி என்ன எண்ணுகின்றது?  

பதில்: 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி நடக்கின்றது. சூழ்ச்சியை மேற்கொண்டது, எதிர்க் கட்சித் தலைமைக்கு சண்டை பிடிப்பது, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வது எல்லாமே தனிப்பட்ட நன்மைக்கே தவிர மக்களுக்காக அல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது. அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிக்கையை உள்ளடக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி உறுதியாக இருந்தது. அதற்காக செயல்படவும் செய்தது. பிரதான கட்சிகள் இரண்டும் அவ்வளவு தூரம் அதனை விரும்பவில்லை.  

கேள்வி: ஜனாதிபதி சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை நிராகரித்தார். அரசியலமைப்பின்படி அவ்வாறு செய்ய முடியாதென அரசாங்கக் கட்சி கூறுகின்றதல்லவா?  

பதில்: 19வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய அமைச்சர்கள் யாரென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஆனால் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுக்கப்படும் நபருக்கு வழங்கப்படும் விடயங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.   

கேள்வி: பிரதமர் பரிந்துரை செய்த உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதி அமைச்சர் பதவிகளை வழங்க மறுத்துள்ளார். அதன்படி அரசியலமைப்பு மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் நீதிமன்ற உதவியைப் பெற முடியுமா?  

பதில்: சிலர் நீதிமன்ற உதவியை பெறவுள்ளதாக கூறியுள்ளார்கள். தற்போது நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் எதிர்வரும் காலங்களில் அது குறித்து ஆராயவுள்ளார்கள்.  

கேள்வி: ஆவா அணியினர் குறித்து எதிர்க்கட்சியிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பீதியை ஏற்படுத்தினார்கள். ஆனால் தற்போது தெற்கிலும் கொலை கலாசாரம் அதிகரித்துள்ளது. வடக்கில் போன்று தெற்கிலும் காணப்படும் இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சிலர் கூறுகின்றார்களே? இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?  

பதில்: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் கொள்ளைக்காரர்கள், கள்வர்கள் உருவாகுகின்றார்கள். அதனை வடக்கு, தெற்கு எனப் பிரிக்க முடியாது. இங்கு பாதுகாப்பை விட பாதாளம், போதைப்பொருள் கடத்தல் என்பனவே அதிகரிக்கின்ன. அதற்கு முக்கிய காரணம் பொருளாதார வீழ்ச்சியாகும்.  

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றே கூறுகின்றது. அதனால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை என்றும் கூறுகின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி தெளிவான செயல்திறன் மிக்க பொருளாதாரக் கொள்கையொன்றை ஏன் பரிந்துரை செய்யவில்லை?  

பதில்: அதற்காக குறுகிய கால, நீண்ட கால பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். முதலில் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார செயல் திட்டமொன்றை நாம் தயாரிக்க வேண்டும். இன்று எமது நாட்டில் உற்பத்தி முற்றாக குறைவடைந்துள்ளது. எமது இறக்குமதி செலவு 20000 கோடி டொலராகும். ஏற்றுமதி வருமானம் 10000 கோடி டொலராகும். அதிலிருந்தே எமது ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு என்ன நடந்துள்ளதென விளங்குகின்றதல்லவா! அதனால் புதிய தொழில்நுட்பம், நவீன அறிவு என்பவற்றைப் பாவித்து எமது உற்பத்தி பொருளாதாரத்திற்கு நாம் விரைவில் மாற வேண்டும். இதுதான் இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும்.  

கேள்வி: கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் பற்றி கூறப்பட்டது. அதனோடு ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் பேசப்பட்டது. தற்போது அவ்விரண்டையும் தவிர்த்து மாகாண சபைத் தேர்தல் பற்றி பேசப்படுகின்றது. அதுவும் மீண்டும் விருப்புவாக்குகள் முறையில் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது. ம.வி முன்னணி தயாரா? விருப்புவாக்கு முறையை ஆதரிக்கின்றதா?  

பதில்: இந்த அரசு எல்லை நிர்ணயத்தை காரணமாகக் காட்டி தேர்தலை தள்ளிப் போட்டது. தற்போது மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தவுள்ளதாகத் தெரிகின்றது. எவ்வாறாயினும் கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் தேர்தலை முதலில் நடத்த வேண்டும். கலைக்கப்படாதவைகளை பிறிதொரு தினத்தில் நடத்தலாம். அதை விடுத்து ஒவ்வொன்றாக தேர்தலை நடத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம். நாம் தேர்தலுக்குத் தயார்.  

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி விருப்பு வாக்கு முறையை விரும்புகின்றதா?  

பதில்: இச்சந்தர்ப்பத்தில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள முயற்சி செய்தால் தேர்தல் தள்ளிப் போடுவதற்கு காரணமாக அமைந்து விடும். அதனால் விருப்புவாக்கு முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டும் என்பது எமது எண்ணமாகும்.

(தாரக விக்ரமசேகர - சிலுமின)
Wed, 01/02/2019 - 10:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை