கிண்ணியாவில் சட்ட விரோத மண் அகழ்வு; துப்பாக்கிச்சூடு; மூவர் தப்பியோட்டம்

Rizwan Segu Mohideen
சட்ட விரோத மண் அகழ்வு; துப்பாக்கிச்சூடு; மூவர் தப்பியோட்டம்-Illegal Sand Mining-Shooting-3 Escaped

இருவரை காணவில்லை

கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டோரை கைது செய்ய சென்ற வேளையில், அங்கு சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டோர் உள்ளிட்ட பிரதேசவாசிகள் அமைதியற்று செயற்பட்டதன் காரணமாக அங்கு பதற்ற நிலையை அடுத்து வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை பேச்சாளர் சூரிய பண்டார தெரிவித்தார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் ஆற்றில் குதித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில நாட்களாக கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து திருகோணமலை பகுதியில் மகாவலி கங்கை ஆற்று பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (29) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் (28) குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மணல் நிரப்பப்பட்ட 6 படகுகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று அதிகாலை இரு டிப்பர் வாகனங்களுடன் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மீண்டும் கைது நடவடிக்கை சென்ற நிலையில் பிரதேசவாசிகள் உள்ளிட்டோர் குறித்த நபர்களை கைது செய்வதற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.


கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது :

இதேவேளை மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரில் இருவர் ஆற்றில் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் ஆற்றில் பாய்ந்து மூழ்கியுள்ளனர் இதில் ஒருவர் தப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவ இடத்துக்கு பொலிஸார் உட்பட முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த தப்பிச் சென்றவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ருப் மற்றும் அவரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிழக்கு மாகணத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் உடனடி விஜயம் செய்து குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் துப்பாக்கி சூட்டு நடத்திய படை அதிகாரிக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், காணாமல் போனோரை மீட்கும் நடவடிக்கை எடுக்குமாறும்  அறிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களில்  இடம்பெறா வண்ணம் கலந்துரையாடலுக்கு உரிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுப்பு போன்ற செயற்பாடுகளுக்காக  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

(கந்தளாய், கிண்ணியா மத்திய தினகரன் நிருபர்கள்)

Tue, 01/29/2019 - 14:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை