10 வருடங்கள் ஆட்சியிலிருப்பதை உறுதிப்படுத்தும் பட்ஜட் தயாரிப்பு

ஆட்சியில் இன்னும் 10 வருடங்கள் நிலைப்பதை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தை இடும் வகையில் வரவு,செலவுத்திட்டம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக பொது விநியோகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் சதியின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.ஒக்டோபர் 26ஆம் திகதியின் பின்னரான 51 நாட்கள் நாட்டில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புத் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கையொன்றை முன்வைத்துள்ள இக்காலப் பகுதியில் 21 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாடு எதிர்கொண்டிருக்கும் சவாலை வெற்றிகரமாக முகங்கொடுத்து, அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கக் கூடிய வகையில் வரவு செலவுத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் கூறினார்.

சர்வதேச நாணய சந்தையில் இலங்கை தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக கடன்களை மீளச்செலுத்துவதற்கான தகுதி நாட்டுக்கு உள்ளது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தினாலே திறைசேரிமுறி மற்றும் முதலீடுகளை நாட்டுக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை விளக்கி சர்வதேச நாணய சந்தையின் ஒத்துழைப்பைக் கோரும் நோக்கில் நிதியமைச்சர் தலைமையிலான குழுவொன்று நியூயோர்க் செல்லவிருப்பதாகவும், தானும் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த வரும் முதல் 9 மாதங்களில் 407 மில்லியன் அமெரிக்க டொலர்களே நாட்டைவிட்டுச் சென்றுள்ளன. எனினும் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 497 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டைவிட்டுச் சென்றுள்ளன. பங்குச் சந்தையில் முதல் 9 மாதங்களில் 36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிச்சென்றபோதும், கடந்த மூன்று மாதங்களில் 97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிச் சென்றுள்ளன. நாணயப் பெறுமதியிறக்கமானது கடந்த மூன்று மாதத்தில் மாத்திரம் 7.6 வீதமாகும்.

கடந்த வருடம் இலங்கை மாத்திரமன்றி ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கும் சவாலாக இருந்தன.

இலங்கை போன்று நாணயப் பெறுமதி இறக்கத்துக்கு முகங்கொடுத்திருந்த நாடுகள் பல ஒக்டோபர் மாதத்தின் பின்னர் பலமான நிலைக்குச் சென்றன. எனினும் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சதியால் முன்னேற முடியாமல் போனது. இதற்கு சதியில் ஈடுபட்டவர்களே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 10 வருடத்துக்கு ஆட்சியில் நிலைத்திருக்கக் கூடிய வகையிலேயே திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவது மாத்திரமன்றி தொடர்ச்சியாக ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா மேலும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை