சுமந்திரன் எம்.பி சபாநாயகருக்கு கடிதம்

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் கடிதமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்டுள்ள எதிர்க்கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த விவாதமும் இல்லை. எவ்வாறெனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சியாக உள்ளதா என்பதே இப்போது நமக்குள்ள கேள்வியாகும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற பாரம்பரியத்தின்படி எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சி அரசாங்கத்தில் பங்குகொள்வதில்லை. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  எதிர்க்கட்சியாக கருதப்படமுடியாது. ஏனெனில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் உள்ளார். அத்துடன் அவர் பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் உள்ளார். இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் அரசாங்கத்தின் தலைவராக மட்டுமன்றி மூன்று அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய அமைச்சராகவும் இருக்கிறார். எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்க்கட்சியில் உள்ள ஒரு கட்சியாக கருத முடியாது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் பக்கம் வந்தனர். அதற்கு முன்னர் மூன்று உறுப்பினர்கள் இதேபோல் கட்சி தாவினர். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. அத்துடன் மேற்கூறிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்த பட்சம் இருவருக்கு பிரதமரின் அமைச்சுப் பட்டியலில் இடம் கிடைத்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்படலாம். அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேலும் பல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் வரக்கூடும்.

மேலே குறிப்பிடப்பட்ட சூழலின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எந்த வகையிலும் எதிர்க் கட்சியில் உள்ள ஒரு கட்சி என்று கூற முடியாது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எந்தவொரு உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட முடியாது.

முன்னைய ஜனாதிபதிகளின் பதிவுகளின்படி ஜனாதிபதி டி.பி. விஜயதுங்கவின் பதவிக் காலத்தில் மக்கள் கூட்டணி அரசாங்கம் ஜனாதிபதி குமாரதுங்கவின் பதவிக் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதிகள் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளை வகிக்கவில்லை. எனினும் ஜனாதிபதி குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சர் பதவியினை தக்க வைத்துக்கொண்டார். பிரதம நீதியரசர் சரத் சில்வாவின் தலைமையில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையை அடுத்தே அவர் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் பதவியினை வகித்திருந்தார்.

எந்தநிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவும் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 99 (13) (a) என்ற சட்டவாக்கத்தின் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை இழக்கின்றனர். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துகொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் யாப்பின்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து எவரேனும் விலகும் பட்சத்தில் அவர் தானாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பதவியை இழக்கிறார். அவ்வாறான வெளியேற்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு உறுப்பினர் நாடுவதன் மூலம் மட்டுமே இது மாற்றமடையலாம்.

எனினும் அவ்வாறான ஒரு நிலை இங்கு இடம்பெறவில்லை. எனவே எந்தவொரு மேலதிக செயற்பாடு (கட்சியின் பொதுச் செயலாளரிடம் இருந்து வரும் தொலைதொடர்பு) எதுவும் இல்லாத நிலையில் சட்டத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேற்கூறிய உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற ஆசனங்களை விட்டு விலகியதாகவே கருதப்படும்.

அரசியல் கட்சியொன்றில் இருந்து அங்கத்துவத்தை இழந்தவர்கள் தொடர்பான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் தேவை உள்ள நிலையில் குறிப்பிட்டவிடயம் பற்றி தீர்மானிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படலாம். இதற்கான ஆலோசனை ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை என்பது ஒரு பாரதூரமான விடயம். எனவே இந்த விடயம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு தீர்க்கப்படும் வரை மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாராளுமன்றத்தில் ஆசனம் இழந்த வேறு எந்த உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படக்கூடாது என்று அந்த கடிதத்தில் சுமந்திரன் கூறியுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், சர்வதேச பாராளுமன்ற சங்கம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், பொதுநலவாய செயலாளர் நாயகம், ஐரோப்பிய யூனியன் மற்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

 

 

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை