இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

Rizwan Segu Mohideen
இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு-SL Highest Amount of Heroin Seized

- 278 கி.கிராம் ஹெரோயின், 5 கி.கிராம் கொக்கேன் மீட்பு
- பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருளான 278 கிலோ கிராம் நிறை கொண்ட, ரூபா 303.6 கோடி (ரூ. 3,036 மில்லியன்)  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ரூபா 7.5 கோடி (ரூ. 75 மில்லியன்) பெறுமதியான 5 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு-SL Highest Amount of Heroin Seized

இன்று (31) பகல் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு-SL Highest Amount of Heroin Seized

கல்கிஸ்ஸை, டெம்ப்லஸ் (Templers Road, Mount Lavinia) வீதியில் உள்ள தொடர்மாடி கட்டடத்தின் 4 ஆவது மாடியிலுள்ள வீடொன்றில் வைத்தே குறித்த பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 44, 30 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் கேக் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 9 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடம் மற்றுமொரு வீட்டின் சாவிகளும்,  தூரத்திலிருந்து வீட்டின் கதவுகளை திறக்கும் தன்னியக்க கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தெஹிவளை, அத்திட்டிய, கவ்டான வீதியில் உள்ள இரு மாடிகளைக் கொண்ட வீட்டிற்கு சந்தேகநபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு-SL Highest Amount of Heroin Seized

ஜன்னல் கதவுகள் பூட்டப்படிட்ருந்த குறித்த வீட்டின் கதவை, சந்தேகநபர்களிடமிருந்த திறப்புகளின் மூலம் திறந்து சோதனையிட்டபோது, குறித்த வீட்டின் எல்லா பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை பொலிசார் மீட்டுள்ளனர்.

அவை கேக் பெட்டிகளிலும் பல்வேறு பொதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதோடு, இவர்கள் இதற்கு முன்னர் எப்போது இங்கு வந்துள்ளனர் என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தெஹிவளை, கவ்டான வீதியில் உள்ள குறித்த இரு மாடிகளை கொண்ட வீட்டை மிக நீண்ட நாட்களாக வாடகைக்கு பெற்றுள்ள இவர்கள், குறித்த வீட்டை ஹெரோயின் விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஹெரோயின் மத்திய நிலையமாக பயன்படுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் குறித்த வீட்டை ஹெரோயினை  நிறையிட்டு, பொதி செய்வதற்கும்,  அவற்றில் மேலும் பல பதார்த்தங்களை சேர்த்து உற்பத்திகளை செய்து வந்துள்ளதோடு, அவ்வீட்டை இதற்கான பாதுகாப்பான இடமாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய குறித்த வீட்டின் உரிமையாளர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி, நுகேகொட, பாகொட வீதியில் வைத்து சுமார் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள், கேக் பெட்டியில் வைத்து, முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்பட்ட வேளையில் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் டிசம்பர் 15 ஆம் திகதி, தெஹிவளை, காலி வீதியில் வைத்து கேக் பெட்டியில் வைத்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதோடு. குறித்த பெண் தங்கியிருந்த இரத்மலானை, தெல்கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து மேலும் 36 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட ஹெரோயின் போதைப் பொருள்கள் தற்போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புபட்டது என புலனாவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த ஹெரோயின் போதைப் பொருள் இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவும், சுங்க திணைக்களமும் இணைந்து கடந்த 2013 ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் களஞ்சியசாலையில் வைத்து கிறீஸ் டின்களில் கொண்டுவரப்பட்ட 261 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பேருவளை - பலபிட்டிய கடலில் வைத்து, 231 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (31)  கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி ரூபா 333.6 கோடிக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வீட்டிலிருந்து, ரூபா 7.5 கோடி (ரூ. 75 மில்லியன்) பெறுமதியான 5 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை பெறும் பொருட்டு அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Mon, 12/31/2018 - 20:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை