துணை மருத்துவப் பிரிவு, தாதியர் கற்கைப் பிரிவு உருவாக்கம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்

தென் கிழக்குப் பிராந்திய மக்களினது நன்மை கருதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன். மருத்துவத்துறைக்கு முன் துணை மருத்துவப் பிரிவொன்றையும் தாதியர் கற்கைப் பிரிவொன்றையும் உருவாக்குவதற்காக திட்ட வரைபொன்று சமர்ப்பிக்கப்படுமென நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுகாதார சிகிச்சை நிலையத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் மற்றும் வருமானம் குறைந்த குடும்பத்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆகியன நேற்று(28) பாலமுனை ஹுஸைனியா நகர்ப் பிரதேசத்தில் நடைபெற்றன. இவ் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு அரசியல் அதிகாரம் தற்போதைய அரசாங்கத்தில் கிடைத்திருக்கின்றது. அவ்வதிகாரத்தினைக் கொண்டு நமது மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கத்தக்கதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

இதனடிப்படையில், வழங்கப்பட்ட உயர் கல்வி அமைச்சர் பொறுப்பில் உள்ள இக்காலப் பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஓர் மருத்துவத் துறைப் பிரிவை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அத்தோடு எமது கட்சியைச் சேர்ந்த சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரின் முயற்சியோடு கல்முனை வடக்கு முதல் பொத்துவில் வரையான பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை ஒன்றிணைத்து பாரியதும் இலங்கையின் அதி விசாலம் கொண்ட நிலப்பரப்பையும் கொண்ட பொது வைத்தியசாலையொன்றை தென்கிழக்குப் பிராந்தியத்தில் உருவாக்க உள்ளோம்.

நாம் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய அரசாங்கம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பல பகீரத பிரயத்தனங்களுக்கப்பால் தற்போது அப்போதிருந்த அரசாங்கத்தை மீளவும் ஆட்சி பீடம் ஏறச் செய்திருக்கின்றோம்.

இவ்வாறு ஆட்சி பீடம் ஏறியிருக்கின்ற இவ் வரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் எல்லோரும் தமது அதிகாரம் முடிவடைவதற்குள் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திகளையும் இன்னோரன்ன செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான அசுர வேகத்தில் இயங்க வேண்டிய தேவைக்குள் அகப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகள் நாம் பல அபிவிருத்திப் பணிகளையும் இன்னுப் பல செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த போதிலும், மக்களின் பாரிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விவகாரத்தில் பாரியளவில் நாம் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த காலத்தைப் போலல்லாது நாங்கள் புதிய உத்வேகத்துடன் களத்தில் இறங்கி செயற்பட வேண்டியதுடன், எம்மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. எமக்குக் கிடைக்கின்ற அனைத்து விடயங்களையும் ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள கட்சி மத்திய குழுவினரோடு இணைந்து அப்பிரதேசம் முழுமையான அபிவிருத்தி அடையும் செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை வழங்கக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்றார்.

இந் நிகழ்வின்போது சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் உள்ளிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை தினகரன், பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்கள்

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை