உக்ரைன் மீது குற்றச்சாட்டு
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் நேற்று (30) காலை தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் ரஷ்ய தலைநகரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இது முதல் முறையாகும்.
குறைந்தது எட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் பல கட்டடங்களுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் எவருக்கும் மோசமான காயங்கள் ஏற்படவில்லை என்று மொஸ்கோ மேயர் செர்கெய் சொபியானின் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்படுவதை உக்ரைன் மறுத்துள்ளது.
இதில் உக்ரைனுக்கு நேரடித் தொடர்பு இல்லை, ஆனால் இந்த நிகழ்வை பார்த்து மகிழ்ந்ததாகவும் இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் உக்ரைனிய ஜனாதிபதியின் உதவியாளர் மிகைலோ பொடொல்யாக் தெரிவித்துள்ளார்.
இந்த எட்டு ஆளில்லா விமானங்களும் இடைமறிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
“அவைகளில் மூன்று மின்னணு போர் முறை மூலம் ஒடுக்கப்பட்டு இலக்கில் இருந்து நீக்கப்பட்டன. மேலும் ஐந்து ஆளில்லா விமானங்கள் மொஸ்கோ பிராந்தியத்தில் உள்ள நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் பான்ட்சிர் எஸ் ஏவுகணை முறை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டன” என்று அமைச்சு தெரிவித்தது.
இதில் 30 ஆளில்லா விமானங்கள் தொடர்புபட்டிருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. வீழ்த்தப்பட்ட அவை கட்டடங்கள் மீது விழுந்ததாக கூறப்பட்டது.
முதலில் மக்கள் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று மொஸ்கோ மேயர் தெரிவித்தார். இருவர் மருத்துவ உதவியை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சரமாரி ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்தே மொஸ்கோ மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்தத் தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார்.
இருபதுக்கு மேற்பட்ட ஆளில்லா விமானங்களை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்த நிலையில் விமானப்பாகங்கள் கட்டடம் ஒன்றின் மீது விழுந்து தீப்பற்றியதாக உக்ரைனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கீவ் மீதான ரஷ்யாவின் உக்கிர ஏவுகணை தாக்குதல்களுக்கு கடுமையான பதில் கொடுக்கப்படும் என்று உக்ரைனிய இராணுவ உளவுப் பிரிவு தலைவர் ஜெனரல் கிரிலோ புடனோவ் எச்சரித்திருந்தார்.
உக்ரைனில் போர் தீவிரம் அடைந்திருந்தபோதும் தற்போது வரை ரஷ்ய தலைநகரில் அமைதிச் சூழலே நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.
from tkn