புர்கினா இராணுவ முகாம் மீது தாக்குதல்: 33 படையினர் பலி

கிழக்கு புர்கினா பாசோவில் இராணுவ முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 33 படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டில் இடம்பெறும் வன்முறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக துருப்புகள் வரும் முன்னர் முற்றுகையில் சிக்கிய படையினர் குறைந்தது 40 பயங்கரவாதிகளை கொன்றதாக இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு பிராந்தியத்தின் அவுகருவில் உள்ள இராணுவப் பிரிவின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புர்கினா பாசோ இராணுவத்தினர் 2015 தொடக்கம் கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோதல்களில் 10,000க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டிருப்பதோடு, குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நாட்டின் மூன்றில் ஒரு பகுதி அரச கட்டுப்பாடில் இருந்து விலகியுள்ளது.

புர்கினா பாசோவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இரு இராணுவ சதிப்புரட்சிகளை அடுத்தே அந்நாட்டின் தற்போதைய தலைவர் கெப்டன் இப்ராஹிம் தரோரே கடந்த செப்டெம்பரில் ஆட்சிக்கு வந்தார். இந்த தொடர் வன்முறைகள் இராணுவத்திற்குள்ளும் அதிருப்தியை எற்படுத்தியுள்ளது.

நாட்டின் கட்டுப்பாட்டை இழந்த பகுதியை மீட்பதாக தரோரே வாக்குறுதி அளித்தபோதும் இந்த ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 04/29/2023 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை