பல பில்லியன் டொலர் ஆதரவு: வங்கிகளின் நெருக்கடி தளர்வு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிரச்சினையில் உள்ள கடன்வழங்குனர்களுக்கு பல பில்லியன் டொலர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய வங்கி நெருக்கடி குறித்த அச்சம் தளர்த்தப்பட்டதோடு ஆசிய பங்குச் சந்தைகளும் மீட்சி பெற்றுள்ளன.

அமெரிக்காவில் பெரிய 11 வங்கிகள் இணைந்து சிக்கலில் மாட்டியிருக்கும் பெஸ்ட் ரிப்பப்லிக் வங்கிக்கு 30 பில்லியன் டொலர் மதிப்புடைய ஆதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நேற்று (17) சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங்கில் பங்குகள் உயர்ந்தன.

சிலிக்கன் வெல்லி வங்கி மற்றும் சிக்னெச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் அண்மையில் முடங்கியதை அடுத்து அந்நாட்டின் பங்குச் சந்தையில் பதற்றம் ஏற்பட்டது.

தனியார் வங்கிச் சேவைகள், சொத்து நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபடும் பெஸ்ட் ரிப்பப்லிக் வங்கி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அடிபட்டது. அதன் பங்கு விலைகள் 30 வீதம் சரிந்தன.

வங்கி முடங்கிவிடுவதைத் தவிர்க்க ஜேபீமோர்கன் செஸ், அமெரிக்க வங்கி உள்ளிட்ட அமெரிக்காவின் பெரிய வங்கிகள் உதவ முன்வந்தன. இதனை அடுத்து பெஸ்ட் ரிப்பப்லிக் வங்கியின் பங்கு விலைகள் 10 வீதம் அதிகரித்தன.

மறுபுறம் சுவிட்ஸர்லந்தின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான கிரெடிட் சுவிசின் பங்கு விலைகள் மீட்சி அடைந்துள்ளன. சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியிடமிருந்து 54 பில்லியன் டொலர் கடனாகப் பெற அந்த வங்கி தீர்மானித்ததை அடுத்தே முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Sat, 03/18/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை