கொவிட் முடக்கத்தை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்

- தலைநகருக்கும் பரவியது கொரோனா

சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பல நகரங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இந்த கடும் கட்டுப்பாடுகளுடன் தொடர்புபட்டு; மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் ஏற்பட்ட தீயில் பலரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்தே எதிர்ப்பு வலுத்துள்ளது.

தலைநகர் பீஜிங்கின் ட்சிங்குவா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று (27) பேரணி நடத்தியதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இதன்போது பொது முடக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி அவர்கள் கோசம் எழுப்பியுள்ளனர்.

சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஷங்காய் நகர் மற்றும் நான்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்ப்பட்டங்களை தொடர்ந்து இந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சீன அரச தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

எனினும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சின்ஜியாங்கில்; கொவிட் நோய்ப்பரவலுக்கு எதிரான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா கொவிட் தொற்றை முழுமையாக துடைத்தொழிக்கும் கொள்கையை பின்பற்றுவதோடு இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கும் வகையிலான கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சின்ஜியாங்கில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் பத்துப் பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு முடக்க நிலை அமுலில் இருந்ததாலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்தப்ப முடியாமல் போனதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சின்ஜியாங்கில் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மில்லியன் கணக்கானோர் வீடுகளுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை