முறைப்பாடு கிடைத்தால் நவீன் மீது நடவடிக்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

மின் இணைப்பினை துண்டிக்கச்சென்ற ஊழியர்களை முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தாக்குவதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள நவீன் திசாநாயக்கவின் வீட்டிற்குரிய மின்சார கட்டணம் நீண்டகாலமாக செலுத்தப்படவில்லை.

இந்த நிலையில் மின் கட்டணத்தை செலுத்துமாறு மின்சார சபையினால் பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையில், மின் இணைப்பினை துண்டிக்க நேற்று முன்தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதே மின் இணைப்பினை துண்டிக்கச் சென்ற ஊழியர்களுடன் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, தாக்குவதற்கும் முயற்சித்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் இதுவரை முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க மறுத்துள்ளார்.

தனது முகநூலில் பதிவேற்றியுள்ள இடுகையொன்றிலேயே அவர் மறுப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

இணையத்தின் வாயிலாக மின் கட்டணம் செலுத்தப்பட்டதாகவும், அதனை பொருட்படுத்தாது ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மின்சாரத்தை துண்டிக்க வந்த ஊழியர்ளுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக ஏற்றுக்கொண்டுள்ள நவீன் திசாநாயக்க,எவ்வாறாயினும் அவர்களின் கடமைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் தாம் செயற்படவில்லை எனவும் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

 

Sat, 11/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை