இயன் புயலால் அமெரிக்காவில் பலத்த சேதம்: மின் துண்டிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கியுள்ள இயன் புயலால் மில்லியன் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை கடந்த பல ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான புயலாக மாறியிருக்கும் இயன் புயலால் மணிக்கு 241 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

கடந்த புதன்கிழமை கரையை அடைந்த இந்தப் புயலால் மருத்துவமனை ஒன்றில் கூரை வீசி எறியப்பட்டதோடு, கார்கள் மூழ்கடிக்கப்பட்டு மரங்கள் பிடிங்கி எறியப்பட்டன.

புயல் காரணமாக கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விமான நிலையத்தில் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.

இயன் தற்போது நான்காம் வகை புயலாக தீவிரம் குறைந்துள்ளது. எனினும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் சுமார் 3.6 மீற்றருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. சில வீடுகள் தரைமட்டமாயின.

இயன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மெக்ஸிகோ வளைகுடா வழியாக புளோரிடாவுக்குச் செல்வதற்கு முன், இயன் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய புயலாக மேற்கு கியூபாவைக் சூறையாடி, இரண்டு பேரை காவுகொண்டதோடு நாட்டின் மின் கட்டமைப்பை செயலிழக்கச் செய்தது.

Fri, 09/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை