சிரியாவில் தஞ்சப் படகு மூழ்கியதில் 61 பேர் பலி

லெபனானில் இருந்து தஞ்சக்கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த படகு ஒன்று சிரிய கடல் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர் தப்பிய இருபது பேர் தெற்கு சிரிய நகரான டார்டூசில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லெபனான் துறைமுக நகரான திரிபோலிக்கு அருகில் இருக்கும் மின்யேவில் இருந்து 120 தொடக்கம் 150 வரையானோரை இந்தப் படகு ஏற்றி வந்ததாக உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் கடுமையான காலநிலைக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. லெபனானில் 1.5 மில்லியன் சிரிய அகதிகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 14,000 அகதிகள் வாழ்கின்றனர். லெபனானில் தற்போது மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் அந்நாட்டில் உள்ள அகதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டில் வாழும் அகதிகள் மற்றும் குடியேறிகள் ஐரோப்பா உட்பட வேறு இடத்திற்கு செல்ல முயன்று வருகின்றனர். இந்நிலையில் மூழ்கிய படகில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட லெபனான், சிரியா மற்றும் பலஸ்தீன நாட்டவர்கள் இருந்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

ஐரோப்பாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே அந்தப் படகு மூழ்கியுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் லெபனானில் இருந்து தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு ஒன்று ஐரோப்பாவை நோக்கி பயணித்தபோது துருக்கிக் கடலில் மூழ்கியதில் சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். நான்கு படகுகளில் இருந்து 73 குடியேறிகள் மீட்கப்பட்டதாக துருக்கி கரையோர காவல் படை கூறியது.

Sat, 09/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை