அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தாய்வான் விஜயத்தால் பரபரப்பு

சீனா இராணுவ ஒத்திகை: வர்த்தகக் கட்டுப்பாடு

சீனாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தில் அவர் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென்னை நேற்று புதன்கிழமை சந்தித்தார்.

தாய்வானுக்கு கடந்த 25 ஆண்டுகளில் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியாக பெலோசி பதிவாகியுள்ளார். இந்த தீவை அமெரிக்கா கைவிடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துவதற்காகவே தமது தூதுக்குழு இங்கு வந்ததாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெலோசியின் இந்த விஜயத்திற்கு அமெரிக்கா விலை கொடுக்க வேண்டி ஏற்படும் என்று சீனா முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.

தாய்வான் சுயமாக ஆளப்படுகின்றபோதும், அதனை தனது பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதுகிறது. அது மீண்டும் தனது நாட்டுடன் ஒன்றிணைக்கப்படும் என்று சீனா குறிப்பிடுகிறது.

“தாய்வானுடன் எப்போதும் நிற்பதாக நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா வாக்குறுதி ஒன்றை அளித்தது. இன்று எமது தூதுக்குழு தாய்வானுக்கு வந்து தாய்வான் மீதான எமது பொறுப்பை கைவிடமாட்டோம் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம்” என்று பெலோசி தெரிவித்தார். இதில் அவர் அமெரிக்காவின் தாய்வான் உறவுகள் சட்டத்தை குறிப்பிட்டே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதோடு தாய்வான் விவகாரமும் இதன் முக்கிய புள்ளியாகக் காணப்படுகிறது.

பெலோசியின் வருகை இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள், தாய்வானை சூழவுள்ள கடல்பகுதியில் இந்த வாரத்தில் இராணுவ ஒத்திகை பற்றிய அறிவிப்பை சீனா வெளியிட்டது.

அதேபோன்று தாய்வானுடனான வர்த்தகங்களிலும் சீனா கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. நிர்மாணத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் ஒன்றான மணல் ஏற்றுமதி மற்றும் தாய்வானின் இறக்குமதிகளான சிட்ரஸ் பழம் மற்றும் சில வகை மீன்கள் நிறுத்தப்படும் என்று சீன வர்த்தக மற்றும் சுங்க அதிகாரசபை அறிவித்துள்ளது.

Thu, 08/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை