காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்: உயிரிழப்பு 32 ஆக உயர்வு

மற்றொரு போர் மூளும் அபாயம்

காசா மீது இஸ்ரேல் இரண்டாவது நாளாக நடத்திய வான் தாக்குதல்களில் பலஸ்தீன போராட்டக் குழு ஒன்றின் மூத்த தலைவர் மற்றும் பல சிறுவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காசாவின் தமது தளபதியான காலித் மன்சூர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு நேற்று உறுதி செய்தது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த இரு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய ஜிஹாத் மீதான தமது நடவடிக்கை ஒரு வாரம் நீடிக்கக் கூடும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. காசா மீதான தாக்குதல்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அகதி முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உடனடி அச்சுறுத்தல் காரணமாகவே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஜபலியா அகதி முகாமுக்கு அருகில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவில் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு அது இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியபோதும், இஸ்லாமிய ஜிஹாதின் தோல்வி அடைந்த ரொக்கெட் வெடித்தே இந்த உயிரிழப்புகள் நேர்ந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. மொத்தம் 32 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் குறைந்தது 250 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் 400க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் பெரும்பாலான ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டிருப்பதோடு, இஸ்ரேலிய தரப்பில் காயங்கள் பதிவாகியுள்ளன.

இதில் நேற்று காசாவில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டு ஒன்று ஜெரூசலத்தை அடைந்துள்ளது. 2021 மோதலுக்குப் பின்னர் இத்தனை தூர ரொக்கெட் குண்டு வீசப்பட்டது இது முதல்முறையாகும்.

இந்த வன்முறைகள் காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மற்றொரு போர் பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது. 15 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு மாத கால மோதலில் 260க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் வலுவான போராட்டக் குழு ஒன்றான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு ஈரானின் ஆதரவோடு இயங்குவதோடு அதன் தலைமையகம் சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ளது. இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சு மற்றும் பல தாக்குதல்களுக்கு இந்தப் போராட்டக் குழு பொறுப்பாக உள்ளது.

Mon, 08/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை