அமெரிக்க இராஜாங்க செயலாளர் வருகிறார்

நவம்பரில் வருகை தந்து ஆராய்வார்

அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது பெரும்பாலும்  நவம்பரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை நட்பு நாடுகளிடம் கூடுதல் ஒத்துழைப்புகளை கோரி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் நெருக்கடி குறித்து அமெரிக்கா கூடுதல் அவதானம் கொண்டுள்ளமையை பிரதிபளிக்கும் வகையில் நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் அறிவித்திருந்தார்.

ஜி -20 உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி பைடன் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

அதே போன்று வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவை ஜனாதிபதி பைடன் உட்பட இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் ஆகியோரும் சந்தித்திருந்தனர்.

அந்த சந்திப்புகளின் போது இலங்கையின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு சாதகமான பதிலளிப்பே கிடைத்துள்ளதாக தூதுவர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் உட்பட உயர் மட்ட குழுவினர் கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கை - அமெரிக்க கூட்டுத்திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கள் விஸ்தரிப்பு உள்ளிட்ட பரந்துபட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த குழுவினர் தற்போது வோஷிங்டன் திரும்பியுள்ள நிலையில் இலங்கைக்கான அமெரிக்க ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கனின் இலங்கை விஜயம் தொடர்பான திகதி விபரங்களும் கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Mon, 07/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை