லிபியப் பாராளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர் தீ வைப்பு

லிபியாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் இழுபறிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ள சூழலில் நாட்டின் பாராளுமன்றம் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு நாடாக இருக்கும் லிபியாவில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை மின் வெட்டு அமுலில் இருப்பதோடு விலையேற்றங்கள் மற்றும் அரசியல் நிலை ஆகிய காரணங்களால் நாட்டின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் கிழக்கு நகரான டொப்ரூக்கில் இருக்கும் பாராளுமன்றக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். பாராளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தும் நிலையில் அங்கு அடர்த்தியான புகை வெளியாகும் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

தலைநகர் திரிபோலியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தலை நடத்தும்படி கோசம் எழுப்பினர். இதன்போது பல அரச கட்டடங்களும் தாக்கப்பட்டன. லிபியாவின் நீண்ட கால ஆட்சியாளரான முஅம்மர் கடாபி 2011இல் நேட்டோ ஆதரவு எழுச்சிப் போராட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அந்நாட்டில் அரசில் குழப்ப சூழல் நீடித்து வருகிறது.

லிபியாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டபோதும் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள போட்டி அரசுகளிடம் அதற்கான உடன்பாடு எட்டப்படவில்லை.

Mon, 07/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை