ஆப்கான் பூகம்பம் மீட்புப் பணியில் இடையூறு

பூகம்பத்தால் அவதிக்கு உள்ளாகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் சரியான தொடர்புகள் இல்லாதது, ஒழுங்கான வீதிகள் போடப்படாதது ஆகிய காரணங்களால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஆப்கானிஸ்தானை உலுக்கியது. 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,500 பேர் காயமடைந்தனர். 3,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

தனது உலக உணவுத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் தளவாடங்களை ஆப்கா னிஸ்தானின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. முதலில் 3,000 குடும்பங்களுக்கு உதவ இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதிகமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் அறிக்கை ஒன்றில் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் உடனடியாக உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்தது.

ஜப்பான், தென்கொரியா, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகியவையும் உதவி வழங்க முன்வந்துள்ளன.

தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு உதவியையும் ஆதரவையும் வழங்க இந்தியா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அங்கு வாந்திபேதி நோய் பரவலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பிரிவு எச்சரித்துள்ளது.

அங்கு வாந்திபேதி நோய் பரவுவதைத் தடுப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Sat, 06/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை