நிலையியல் கட்டளைக்கேற்ப சபாநாயகர் செயற்பட வேண்டும்

அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவிப்பு

எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு இணங்கவே செயற்பட வேண்டுமென சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். அதேவேளை, சபாநாயகரின் உத்தரவுக்கு முழு பாராளுமன்றமும் கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலை தொடர்பில் உங்கள் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை பயனளிக்கும் வகையில் அவசர கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

சபையில் நேற்று விசேட கவனயீர்ப்பு உரையொன்றை நிகழ்த்திய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

ஒருபுறம் அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிடலாம். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

அடுத்தது பாதுகாப்பு நிலைமைகள் கேள்விக்குறியாகி விடக்கூடாது. அது தொடர்பில் கட்சித் தலைவர்களைக் கூட்டி நீங்கள் மிக விரைவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது முக்கியம். பாராளுமன்ற முறைமைக்கு அது மிகவும் முக்கியமாகும்.

அதேவேளை நேற்று முன்தினம் பிரதி சபாநாயகர் தெரிவின் போது பல வாத விவாதங்கள் நடைபெற்று ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி ஏற்றும் முடிந்துவிட்டது. அதில் சில தரப்பினருக்கு வெற்றி பெற முடியாது போயுள்ளது.

அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சபையில் குறிப்பிடும் போது சபாநாயகருக்கு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒன்று ஜனாதிபதிக்கு எதிராகவும் அடுத்தது பிரதமருக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் அது தொடர்பில் கட்சி தலைவர்கள் மற்றும் தெரிவுக்குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்கள். அதன்போது நானும் ஆளும்கட்சியின் பிரதம கொரடாவும் அதேபோன்று சட்ட முறைமைகள் நன்றாக தெரிந்த சுமந்திரன் போன்றோரும் அதில் பங்கேற்றிருந்தனர். அதன் போது சில தெளிவுகளை சபாநாயகர் வெளியிட்டார். அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டே சென்றோம்.எனினும் எதிர்க்கட்சித் தலைவர் அதனையே மீண்டும் மீண்டும் சபையில் தெரிவிக்க முயன்றால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பாக அமையும்.

நிலையியற் கட்டளையின் படி செயற்படக் கூடிய அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கவில்லை.

அதேபோன்று சபாநாயகர் விடுக்கும் உத்தரவிற்கு முழு பாராளுமன்றமும் கடமைப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

Sat, 05/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை