உக்ரைனிய பாடசாலை மீது ரஷ்யா தாக்குதல்; பலர் பலி

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் பாடசாலை ஒன்று தரைமட்டமாகி உள்ள நிலையில் இடிபாடுகளில் காணாமல்போயுள்ள குறைந்தது 60 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

ரஷ்ய படை பாடசாலை மீது கடந்த சனிக்கிழமை வீசிய குண்டுகளில் இருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக லுஹன்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹிய் ஹெய்டெய் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 30 பொதுமக்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிலோஹொர்கா கிராமத்தில் இருக்கும் இந்த பாடசாலையில் சுமார் 90 பேர் அடைக்கலம் பெற்றிருந்தனர். தாக்குதலை அடுத்து கட்டடத்தில் தீ பரவியுள்ளது.

“சுமார் நான்கு மணி நேரத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. பின்னர் இடிபாடுகள் அகற்றப்பட்டபோது துரதிருஷ்டவசமாக இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன” என்று ஹெய்டெய் குறிப்பிட்டுள்ளார்.

டெலிகிராம் செயலியில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, “இடிபாடுகளில் இருந்து முப்பது பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கில் அறுபது பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது” என்றார். பிலோஹொர்கா கிராமம் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் செவரோடோனெட்ஸ்க் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நகரில் உக்ரைன் படைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெற்று வருகிறது.

ரஷ்யப் படை பொதுமக்களை இலக்கு வைப்பதாகவும் போர் குற்றத்தில் ஈடுபடுவதாகவும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.

உக்ரைனில் 10 வாரங்களாக நீடித்துவரும் ரஷ்ய போரினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, பல நகரங்களும் அழிக்கப்பட்டிருப்பதோடு ஐந்து மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Mon, 05/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை