சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைய விண்ணப்பம்

உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் நேற்று உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்தே இரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.

“நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்து மற்றும் சுவீடனின் கோரிக்கையை நான் வரவேற்கிறேன். நீங்கள் எமது நெருங்கிய கூட்டாளிகள்” என்று நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டொல்டன்பேர்க் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு வரலாற்றுத் தருணம். இதனை நாம் கைப்பற்ற வேண்டும்” என்று பிரசல்ஸில் இருக்கும் நேட்டோ தலைமையகத்தில் நேற்று உரையாற்றும்போது ஸ்டொல்டன்பேர்க் தெரிவித்தார்.

பனிப்போர் காலம் முழுவதும் நடுநிலையான கொள்கையை பின்பற்றி வந்த இந்த இரு நாடுகளும் நேட்டோவில் இணைய முடிவெடுத்திருப்பது ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த விண்ணப்பங்கள் நேட்டோவின் 30 அங்கத்துவ நாடுகளால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இந்த நடைமுறைக்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பின்லாந்து மற்றும் சுவீடன் இணைவது குறித்து துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

அவரது ஆட்சேபனையை சமாளித்து, எதிர்பார்த்தபடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றால் இந்த இரு நாடுகளும் சில மாதங்களுக்குள் நேட்டோ அங்கத்துவத்தை பெற்றுவிடும். இந்த நடைமுறைக்கு வழக்கமாக எட்டுத் தொடக்கம் 12 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றபோதும், ரஷ்யாவின் அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் இதனை விரைவுபடுத்த திட்டமிடப்படுகிறது.

சில நாட்களுக்குள் இந்த நாடுகளை சேர்க்கும் நெறிமுறையை உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக கனடா கூறியுள்ளது.

இந்த விண்ணப்பக் காலத்தில் பின்லாந்து மற்றும் சுவீடனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு குறிப்பாக இங்கிலாந்து உட்பட பல நேட்டோ நாடுகளும் முன்வந்துள்ளன.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்தே நேட்டோ அங்கத்துவத்தை பெறும் திட்டத்திற்கு பின்லாந்து மற்றும் சுவீடன் தள்ளப்பட்டதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

எனினும் இந்த நாடுகள் அங்கத்துவத்தை பெறுவதற்கு எர்துவானின் கடுமையான நிலைப்பாடு பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

துருக்கியின் நிலைப்பாட்டை மற்ற சுவீடன் அந்நாட்டுக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பவிருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், சுவீடன் மற்றும் பின்லாந்து பிரதிநிதிகள் துருக்கி வந்து “தொந்தரவு செய்யக் கூடாது” என்று எர்துவான் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.

துருக்கியால் பங்கரவாதிகள் என்று கூறப்படும் குழுக்களுக்கு பின்லாந்து மற்றும் சுவீடன் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம்சாட்டுகிறது. 2019 ஆம் ஆண்டு துருக்கி, சிரியாவில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்ததை அடுத்து துருக்கி மீது சுவீடன் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியின் விரிவாக்கத்திற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

Thu, 05/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை