உக்ரைனிய போர்: உலக உணவு நெருக்கடி பற்றி ஐ.நா. எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய சர்வதேச உணவு நெருக்கடி ஒன்றை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

விலை அதிகரிப்புக் காரணமாக ஏழை நாடுகளில் உணவு பாதுகாப்பின்மை இந்தப் போரினால் மோசமடைந்திருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிய ஏற்றுமதிகள் போருக்கு முந்திய நிலைக்கு மீட்டெடுக்கப்படாவிட்டால் சில நாடுகளில் நீண்ட கால பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

உக்ரைன் பெருமளவான சமையல் எண்ணெய் அதேபோன்று சோளம் மற்றும் கோதுமை போன்ற தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் அந்நாட்டு துறைமுகங்களில் இருந்து விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் சர்வதேச விநியோகங்கள் குறைந்திருப்பதோடு மாற்று பொருட்களின் விலை அதிகரிப்புக்குக் காரணமாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உலக உணவு விலைகள் கிட்டத்தட்ட 30 வீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

நியூயோர்க்கில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய குட்டரஸ், போருடன் காலநிலை மாற்றம் மற்றும் பெருந்தொற்றும் சேர்ந்து பல மில்லியன் கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதோடு தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி மற்றும் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

“நாம் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் இப்போது எமது உலகில் போதுமான உணவு உள்ளது. ஆனால் இன்றே நாம் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால், எதிர்வரும் மாதங்களில் உணவு பற்றாக்குறை அச்சுறுத்தலுக்கு முகம்கொடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனின் உணவு உற்பத்தியை மீள் ஒருங்கிணைப்பது மற்றும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் இரு நாடுகளின் உர உற்பத்தி சர்வதேச சந்தைக்கு திரும்புவதே இந்தப் பிரச்சினைக்கு ஒரே சரியான தீர்வாக உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

உக்ரைனின் துறைமுகங்களில் உள்ள தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு அவர் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டார். ரஷ்யாவும் உக்ரைனும் உலகின் கோதுமை இருப்பில் 30 வீதத்தை உற்பத்தி செய்கின்றன.

உக்ரைன், மாதந்தோறும் சுமார் நாலரை மில்லியன் தொன் அளவிலான உணவுப் பொருட்களை அதன் துறைமுகங்கள் வழி ஏற்றுமதி செய்கிறது. ஆனால் ரஷ்யப் போர்க் கப்பல்கள் அந்தத் துறைமுகங்களை முடக்கியுள்ளன.

இருப்பில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உலகெங்கிலும் உணவு விலைகள் அதிகரித்துள்ளன.

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதத்தில் ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்தபோது, ஏற்றுமதி சீர்குலைந்து, விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தபின் அதன் விலைவாசி இன்னும் உயர்ந்தது.

ரஷ்ய படையெடுப்புக்கு முன்னதாகவே, உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துவந்த நிலையில், ரஷ்யா இன்னும் கடினமான சூழலுக்கு தள்ளியுள்ளதாக, ஜெர்மன் வெளியுறவுதுறை அமைச்சர் அன்னலேனா பேர்போக் புதன்கிழமை குற்றம்சாட்டினார்.

“தானியப் போரை ரஷ்யா தொடங்கியுள்ளது. உலகளாவிய உணவு நெருக்கடியை அது தூண்டியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். ”மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் பட்டினி ஏற்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் ரஷ்யா இதை செய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ”மிகப் பெரியளவில் உலகளாவிய உணவு நெருக்கடியை சமகாலத்தில்” உலகம் எதிர்கொண்டு வருவதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட போர்் மூலம் இச்சூழல் மோசமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பின்மையை சரிசெய்யும் திட்டங்களுக்கு உலக வங்கி மேலும் 12 பில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்த அதே நாளில் குட்டரஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Fri, 05/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை