மரியுபோல் உருக்காலையில் ரஷ்யா போர்நிறுத்த அறிவிப்பு

பொதுமக்கள் தப்பிக்க வாய்ப்பு

பேரழிவை சந்தித்துள்ள உக்ரைனிய நகரான மரியுபோலில் இருக்கும் முற்றுகையில் உள்ள உருக்காலையில் ரஷ்யப் போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது.

இங்கு சிக்கியுள்ள உக்ரைனிய படையினர் தொடர்ந்து போராடப்போவதாக கூறியிருக்கும் நிலையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே நேற்று தொடக்கம் இந்தப் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

இந்த அசோவ்ஸ்டால் உருக்காலையில் மூன்று நாட்களுக்கு ரஷ்யாவின் தாக்குதல் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீது தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் விவாதிக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வாறான ஒரு தடை ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை கொண்டுவரப்பட்ட மிகக் கடுமையான தடையாக அமையும் என்று கூறப்படுகிறது.

மூலோபாயம் மிக்க தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யா உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பெரும் உயிரிழப்புகள் மற்றும் அடிப்படை விநியோகங்கள் துண்டிக்கப்பட்டு பெரும் அழிவை சந்தித்துள்ளது.

இங்கிருக்கும் உக்ரைனிய படையினர் அசோவ்ஸ்டால் உருக்காலையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இங்கு கடந்த புதன்கிழமையும் கடும் சண்டை இடம்பெற்றதாக மரியுபோல் மேயர் வடிம் பைசென்கோ தெரிவித்தார்.

ரஷ்யா பீரங்கிகள், டாங்கிகள், விமானங்கள் மற்றும் கடற்கரைக்கு அப்பால் இருக்கும் கப்பல்களைக் கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“உள்ளுர் குடியிருப்பாளர்கள், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு உள்ளனர். சிறுவர்கள் மீட்கப்படும் வரை காத்திருக்கின்றனர். அங்கு 30க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியாகவே ரஷ்யா மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 300க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள உருக்காலையில் பதுங்கி இருந்த 344 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அங்கு மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிஜியா நகருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக செலென்ஸ்கி கூறியுள்ளார்.

அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் நாட்டு மக்களிடம் நிகழ்த்திய உரையில் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Fri, 05/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை