தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் மறைவு

இலங்கைத் தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் தெணியான் நேற்று காலமானார். இவர் 1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்து, தமிழ் ஆசிரியர்,  பகுதித் தலைவர், கனிஷ்ட அதிபர், உப அதிபர், தொலைக்கல்விப் போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு பணி ஓய்வு பெற்ற தெணியான், எழுத்துலகில் இலங்கை அரசின் சாகித்திய ரத்னா விருது உட்பட பல விருதுகளை பெற்றவர்.

1964ல் 'விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் ஆரம்பமான இவரது எழுத்துலகப்பிரவேசம் சுமார் 150 சிறுகதைகள் ,10 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என வளர்ந்து பரிணமித்தது.

இவரது படைப்பாக்கங்கள், இலக்கியப்பணிகள் என்பவற்றிற்காக இலங்கைஅரசின் சாகித்ய ரத்னா விருது (2013), வட மாகாண ஆளுனர் விருது (2008), இலங்கை இந்து கலாசார அமைச்சின் கலாபூஷணம் விருது (2003) என்பன இவரைத் தேடி கௌரவித்தன.

இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’ பரிசையும், மரக்கொக்கு’ நாவல் இலங்கை அரசினதும், வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும் ,'காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும் ‘குடிமைகள் ‘நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருதையும், ‘சிதைவுகள்’ குறுநாவல் தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும்,சுபமங்களா பரிசையும் ,சின்னப்பாரதி அறக்கட்டளை விருதையும் , ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும் பெற்றுள்ளன.

சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் இளவயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சிறுபான்மைத்தமிழர் மகாசபை ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன் சாதியத்துக்கெதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னிலை வகித்தவர்.

ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களது விடுதலைக்காக தனது தனது வாழ்வின் பெரும்பகுதியையும் தனது படைப்பாளுமையையும் அர்ப்பணித்த அமரர் தெனியான் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்தை தனது இலட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 05/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை