ஆப்கான் பெண்கள் முகத்தை மறைக்க தலிபான்கள் ஆணை

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தசாப்தங்களுக்கு பின்னர் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிவதற்கு ஆளும் தலிபான்கள் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

இதனை கடைப்பிடிக்காத மற்றும் புறக்கணிக்கும் பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் பாதுகாவலர் ஒருவர் மூன்று நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

1990களில் தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோதும் பெண்கள் உடலின் அனைத்து பாகங்களையும் மறைக்கும் புர்கா அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் கடந்த ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்த தலிபான்கள் இந்த கட்டுப்பாட்டை நகர் பகுதிகளில் அமுல்படுத்தவில்லை.

ஆப்கானில் பெரும்பாலான பெண்கள் ஏற்கனவே உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா ஆடையை அணிந்தபோதும், குறிப்பாக நகர்புற பகுதிகளில் தமது தலையை மறைக்கும் சாதாரண ஆடைகளையே அணிகின்றனர். இந்நிலையில் தலிபான்களின் தீயவற்றை தடுப்பது மற்றும் நல்லொழுக்கத்தை ஊக்குவிக்கும் அமைச்சு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை ஓர் அறிவுறுத்தல் என்றே தலிபான்கள் குறிப்பிட்டபோதும், இதனை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

இதனை மீறும் முதல் முறை பெண்ணின் விட்டுக்குச் சென்று அவரது கணவர், சகோதரர் அல்லது தந்தையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரண்டாவது முறை ஆண் பாதுகாவலருக்கு அமைச்சினால் அழைப்பாணை விடுக்கப்படவுள்ளது. மூன்றாவது முறை ஆண் காவலர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருப்பதோடு, அவர் மூன்று நாள் சிறை தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

Mon, 05/09/2022 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை