குரங்கம்மையை கட்டுப்படுத்த சுகாதார அமைப்பு நம்பிக்கை

ஆபிரிக்காவுக்கு வெளியில் குரங்கம்மை நோயை கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சொறி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய இந்த வைரஸ் ஐரோப்பா, அமெரிக்க பிராந்தியம் மற்றும் அவுஸ்திரேலியாவில் 100க்கும் அதிகமான சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும், பரந்த அளவில் மக்களிடையே இதன் பாதிப்பு மிதமாகவே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் பொதுவாகக் காணமுடிகிறது. “இது ஒரு கட்டுப்படுத்த முடியுமான நிலைமை” என்று உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய் பிரிவின் தலைவர் மரியா வான் கர்கோவ் கடந்த திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த வைரஸ் தற்போது ஆபிரிக்காவுக்கு வெளியில் 16 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் ஆபிரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய வெடிப்பு இருந்தபோதிலும், குரங்கம்மை மக்களிடையே எளிதில் பரவாது, மேலும் இந்த அச்சுறுத்தல் கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் ஒப்பிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நோய் தோலில் இருந்து தோலுக்கான தொடர்பு மூலமே பரவுகிறது. அத்துடன் இந்த நோய்க்கான வைரஸ்கள் பிறழ்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் முன்னணி நிபுணர் கேர்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கம்மை எளிதில் பரவக்கூடியதல்ல. இதுவரை யாரும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 05/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை