இத்தாலிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் ஜெர்மனி வழக்கு

நாஜி காலத்து போர் குற்றங்களுக்காக இத்தாலி இழப்பீடு கோர முயற்சிப்பது தொடர்பில் இத்தாலிக்கு எதிராக ஜெர்மனி ஐ.நா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

இத்தாலி இழப்பீடு கோருவது ஏற்க முடியாதது என்று 2012 இன் தீர்ப்பு ஒன்று கூறுகின்றபோதும் அந்த நாடு உள்நாட்டில் தொடர்ந்து வழக்குகளை தொடுத்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜெர்மனி குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்கும் பின்னரும் இத்தாலியில் 25க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. சில வழக்குகளில் ஜெர்மனி இழப்பீடு வழங்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது இடம்பெற்று வரும் வழக்குகளில் இத்தாலியில் உள்ள ஜெர்மனிக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ள நிலையிலேயே ஜெர்மனி ஐ.நா நீதிமன்றம் சென்றுள்ளது. வரும் மே 25 ஆம் திகதி இத்தாலி நீதிமன்றம் ஒன்று வழங்கவுள்ள தீர்ப்பில் ஜெர்மனியின் கலாசார, வரலாற்று மற்றும் கல்வி நிறுவனங்கள் இருக்கும் கட்டிடங்கள் உட்பட சில கட்டடங்களை வலுக்கட்டாயமாக விற்பது பற்றி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் 2008 ஆம் ஆண்டு இத்தாலி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 1944 இல் டுகானியில் ஜெர்மனி படையால் கொல்லப்பட்ட 203 பேரில் ஒன்பது பேரின் உறவினர்களுக்கு சுமார் 1 மில்லியன் யூரோக்களை ஜெர்மனி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும் 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்தது தொடக்கம் நாடுகளுக்கு ஏற்கனவே பல பில்லியன் யூரோக்களை வழங்கி இருப்பதாக ஜெர்மனி வாதிடுகிறது.

Mon, 05/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை