பிலிப்பைன்ஸ் ஜனாதிபதித் தேர்தல் நிறைவு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நேற்று மில்லியன் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தமது வாக்குகளை அளித்தனர்.

நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் “பொங்கொங்” மக்ரோஸ் ஜூனியருக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது.

அவருக்கு பெரு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதன்மூலம் 36 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் எழுச்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட மக்ரோஸ் சந்ததியைச் சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி போட்டியில் மக்ரோஸை குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த மிதவாதியான லெனி ரொப்ரேடோ அவரது பிரதான போட்டியாளராக உள்ளார்.

பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் மகிண்டனாவ் வட்டாரத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பாதுகாவல் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பெயர்போன மிண்டனாவ் தீவில் வாக்களிப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

2 நகரங்களில் பல கையெறி குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றிபெற்றபோதும் கடந்த ஆறு ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் ஆட்சியில் இருந்த கடும்போக்காளரான ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை தேர்வு செய்வது மாத்திரமன்றி துணை ஜனாதிபதி, செனட்டர்கள், கீழவை உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கீழ்நிலை அதிகாரிகளை தேர்வு செய்வதற்காகவும் மக்கள் நேற்று வாக்களித்தனர்.

Tue, 05/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை