பிரதமர் மஹிந்த பதவி விலகலாம் எனும் சந்தேகத்திலேயே இ.தொ.கா வெளியேறியது

ஊடக மாநாட்டில் சுமந்திரன் எம்.பி சாடல்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகலாம் என்ற சந்தேகத்திலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (02) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர், தெரிவிக்கையில், மற்றைய கட்சிகளை நான் பெரிதும் விமர்சிப்பது கிடையாது. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்‌ஷ பதவிலிருந்து விலகப் போகிறாரென தெரியவந்த பின்னரே அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அமைச்சுப் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்தவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். மஹிந்த ராஜபக்‌ஷ பலமாக இருந்திருந்தால் ஜீவன் தொண்டமானின் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்திருக்குமா என்பது தொடர்பில் எனக்கு பாரிய சந்தேகமுள்ளது. அது அவர்களது அரசியல்.

அதிகாரத்துக்கு பின்னாலும் சலுகைக்கு பின்னாலும் செல்வது சிலருக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. மனோ கணேசன் இந்த விடயத்திலே மிகவும் பொறுப்பானவராக ஒரு கொள்கைப் பிடிப்போடு அதிகாரத்துக்கு பின்னாலோ அமைச்சுப் பதவிக்கு பின்னாலோ சலுகைக்காகவோ சென்றவரல்ல. இந்த விடயத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாடோடு பயணிக்கக் கூடிய ஒருவராக அவரை நாங்கள் அறிகிறோம். ஒருசிலர் அங்கேயும் இங்கேயுமாக இருக்கிறார்கள் இது பாரிய நுணுக்கமான கலை என்றார்.

 

Wed, 05/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை