புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவேன்

அலிசப்ரி ரஹீம் தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு  வழங்க தீர்மானித்துள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசுக்கு ஆதரவு வழங்குவதே எமது அரசியல் கொள்கை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புத்தளத்தில் நேற்று முன்தினம் (22) மாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கடந்த 9 ஆம் திகதி எவரும் எதிர்பார்க்காத துயரகரமான சம்பவம் ஒன்று கொழும்பில் பதிவாகியது. கொழும்பு காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநயாக நாட்டில் போராட்டங்களை நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆதனை நாங்களும் மதிக்க வேண்டும். இப்படியிருக்கையில், அவர்கள் மீது தாக்குதலை நடத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை அடுத்து, நாடுபூராகவும் பாரளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 56 அரசு ஆதரவு உறுப்பினர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் எனது சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. நான் கடந்த 40 வருடங்களாக இரவு பகலாக உழைத்து சேர்த்த சொத்துக்களையும், எனது அலுவலகத்தையும் வாகனங்களையும் முழுமையாக அடித்து நொறுக்கி, தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள்.

சுமார் 30 வருடங்களின் பின்னர் புத்தளம் மக்கள் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

புத்தளம் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த தமது பிரச்சினைகளுக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த புத்தளம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது கடமையாகும்.

எனவே, என்னை நம்பி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்வதால் அது சாத்தியப்படாது என்பதை உணர்ந்த நான் புத்தளத்திலுள்ள புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினேன்.

ஆளும் அரசுடன் இணைந்து பயணிப்பதால் மாத்திரமே எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என்பதால், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கி, ஆளும் அரசு சார் உறுப்பினராக செயற்பட்டு வந்தேன்.

ஆளும் கட்சியோடு இணைந்து செயற்பட்ட போது புத்தளம் மாவட்டத்தில் கோடிக்கணக்கான நிதியுதவியில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்தேன். இது மக்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

இன்றும் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், புத்தளம் நகரிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பிரதான அரச அலுவலகங்களை மீண்டும் புத்தளம் நகருக்கு கொண்டு வருவதற்கும், தமிழ் மொழி மூலமான தொழிநுட்ப கல்லூரியை அமைப்பதற்கும் திட்டமிட்டிருந்தேன்.

இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி சம்பவத்துடன் எனது சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

எனது அரசியல் பயணத்தை விரும்பாத, பழிதீர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிலரே இளைஞர்களை தூண்டிவிட்டு இப்படியான நாசகார செயலை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளர்.

ஒருசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக செய்த தவறுகளால் முழுப் புத்தளம் மக்களையும் குற்றம் சொல்ல முடியாது.

இப்படியான தாக்குதலை நடத்தி எனது குரலை, எனது அரசியல் பயணத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என ஒருபோதும் நினைக்க வேண்டாம் என எனது எதிர்த்தரப்பு நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

Tue, 05/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை