நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை தொடர்கிறது

 அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மீது நேற்றும் தாக்குதல்

பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும் பல்வேறு வன்முறை  சம்பவங்கள் நேற்றும் பதிவாகின

தாக்குதல் வன்முறை சம்பவங்களில்  இதுவரை 08 பேர் பலி; 219 பேருக்கு காயம்

அமைதிபேண ஒத்துழைக்குமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள்

நாட்டின் அமைதிச் சூழ்நிலையை பாதுகாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஏழு மணியுடன் தளர்த்தப்படுகிறது. நேற்று முன்தினம் கொழும்பிலும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை நேற்றும் தொடர்ந்த நிலையில் நாட்டின் அமைதி சூழ்நிலையை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் சட்டத்துக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அலரி மாளிகைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது அலரிமாளிகையின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உட்பிரவேசிக்க முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் வகையில் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முப்படையினரும் அங்கு அழைக்கப்பட்டு வான் நோக்கிய துப்பாக்கி வேட்டுக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நேற்று அதிகாலை 2 மணியளவில் மேலதிக இராணுவ செயலணிகளும் அங்கு அழைக்கப்பட்டன.

அதேவேளை நேற்று அதிகாலை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றைய தினம் மிரிஹானையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மல்வானை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் இல்லத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பிலும் பல்வேறு பிரதேசங்களிலும் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரின் வீடுகள் மீது நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன;

அமைதியான முறையில் செயற்படுமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு நாட்டின் அமைதிச்சூழல் மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய அழிவுகள் இப்போதைக்கு இடம்பெற்று முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் பொருளாதார ரீதியில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள இத்தகைய தருணத்தில் குழப்பங்களும் வன்முறைகளும் எந்தவித பயனையும் தராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை,பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி நாட்டில் அமைதிச் சூழலையை நிலைநாட்டுவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதி சூழ்நிலையை நிலைநாட்டுவதிலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பொலிசாரும் முப்படையினரும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபர் சஞ்சய் ராஜரத்னம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவர் கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கொழும்பிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களில் 8பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 209 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் இரண்டு அரசியல்வாதிகளும் இரண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உள்ளடங்குகின்றனர் .

அத்துடன் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்துள்ள அரசியல்வாதிகளில் நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள பொது ஜன பெரமுனவின் பொலநறுவை மாவட்ட எம்பி பிரேமகீர்த்தி அத்துகோரள மற்றும் இமதுவ பிரதேசசபையின் தலைவரும் உள்ளடங்குகின்றனர். இமதுவ பிரதேச சபைத் தலைவரின் வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குழப்பகரமான சூழ்நிலையின் போது இடம்பெற்ற மோதல்களில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நிலவிய குழப்பகரமான சூழ்நிலையின் போது முன்னாள் பிரதமரின் மெதமுலன இல்லத்தின் மீதும் டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள் பலரது வீடுகள் தாக்கப்பட்டு மேலும் சில அமைச்சர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வீடுகளும் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, பந்துல குணவர்தன, ரமேஷ் பதிரண, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க ,கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலரது வீடுகளும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் எம்பிக்கள் சிலரது வீடுகளும் தாக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டுமுள்ளன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களின் போது பஸ்கள், அமைச்சர்களின் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட பெருமளவு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டுமுள்ளன. கொழும்பில் பல்வேறு வீதிகளிலும் அவ்வாறு தாக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட வாகனங்களை காண முடிந்தது. கொழும்பு கங்காராம வாவி பகுதியில் பெருமளவு வாகனங்கள் எரிக்கப்பட்ட நிலையிலும் வாவிக்குள் தள்ளப்பட்டிருந்த நிலையிலும் காண முடிந்தது

கொழும்பில் நேற்று பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டதுடன் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வாகன போக்குவரத்துக்கள் மிகவும் குறைவாக காணப்பட்டதுடன் பொலிஸ் மற்றும் இராணுவ வாகனங்கள் கடமைகளில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது.

தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை