நல்லாட்சி அரசில் சஜித் ரூ. 03 பில்லியன் மோசடி

அனுர குமார அதிர்ச்சித் தகவல்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பில்லியன் ரூபா நிதி மோசடியுடன்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊழல் மோசடி கோப்புக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்போதைய அமைச்சரான சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் பேரிலேயே செலவுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இம் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2019 ஆண்டு வரையான காலத்தில் மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றுள்ள இந்த மோசடியில் சஜித் பிரேமதாச தொடர்புபட்டுள்ளதுடன் 2019 நவம்பர் 15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்பட்டதாகவும் அந்த குழுவில் ரணில் விக்கிரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் காரியவசம், மனோ கணேசன், பேர்னார்ட் பிரியந்த ஆகியோரும் உள்ளடங்கி இருந்ததாகவும் அவர் நேற்று தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நடைபெற்றுள்ள பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் இரகசிய கோப்புக்களை அம்பலப்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர், பலம்வாய்ந்த அரசியல்வாதிகள் முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய கோப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் உள்ளடக்கங்கள் அம்பலப்படுத்தப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை