IMF உடன் அரசு கட்டாயமாக கலந்தாலோசிக்க வேண்டும்

தாமதித்தால் நாடு பேரழிவை சந்திக்கும்

38 துறை சார்ந்த ஏற்றுமதியாளர் சங்கங்கள் கூட்டாக அரசிடம் வேண்டுகோள்

இந்த நீண்ட விடுமுறையின் பின்னர் இலங்கை பொருளாதார நிலை மேலும் சிக்கலடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  நடைபெறவிருக்கும் சர்வதேச நாணய சபைக் கூட்டத்தில் உலக வங்கியும் சமுகமளிக்கவுள்ளதால் இலங்கை அரசு தகுதிவாய்ந்த அதிகாரிகளை கட்டாயமாக அனுப்பிவைக்க வேண்டும்.

இலங்கையில் ஏற்றுமதித்துறையில் ஈடுபட்டிருக்கும் 38 துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசுக்கு விரைவாக செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இன்றைய பொருளாதாரச் சூழலும் ஏற்றுமதித்துறை எதிர்கொண்டிருக்கும் சவால்களும் என்ற பொருளில் நேற்று கொழும்பில் இத்துறையினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்ததோடு இம் மாத இறுதியில் இந்தியக் கடன் சலுகை முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவ்வாறு முடிவுக்கு வந்ததும் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியை எழுப்பினர்.

கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கம், அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் இறக்குமதியாளர் மற்றும் வர்த்தகர் சங்கம், ஏற்றுமதியாளர் சங்கம், ஆடைத்தொழில் சம்மேளனம், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் வர்த்தக சங்கம், சீனி இறக்குமதியாளர் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் உட்பட முக்கியமான ஏற்றுமதியுடன் தொடர்புடைய சங்கங்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டன.

சர்வதேச நாணய சபையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்போது ஆலோசகர்கள் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்றும் இலங்கையின் வெ ளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டியிருப்பதால் கடன் அளித்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் அவர்களின் ஒத்துழைப்பையும் பெற வேண்டியது அவசியமென இச் சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள் எழுவதற்கான நடவடிக்கைகளை இன்றைய அரசியல் நெருக்கடிகள் பாதித்துவிடக்கூடாது. இதன் முக்கியத்துவத்தை குறைத்துவிடக்கூடாது. ஏற்றுமதியாளர்கள், கைத்தொழில்துறை, வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத்தரம் என்பனவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம். பட்டினி நிலையை எவ்வாறேனும் தடுத்துவிட வேண்டுமென கொழும்பு தேயிலை வர்த்தகர் சங்கத் தலைவர் ஜயந்தா கருணாரத்ன இங்கு பேசுகையில் குறிப்பிட்டார்.

இலங்கை ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக வருடாந்தம் 16.7 பில்லியன் டொலர்களை ஈட்டுவதாகவும் இலங்கையின் ஒட்டுமொத்த ஊழியர்களின் அரைவாசிப் பேரான 4.2 மில்லியன் சேவையாளர்களுக்கு இத்துறை வேலைவாய்ப்பளித்து வருவதாகவும் குறிப்பிட்ட சங்கப் பிரதிநிதிகள், இன்றைய சூழல் மேலும் மோசமடைவதற்கு முன்னர் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று நிலைமைகளை கட்டுப்படுத்தி மாற்று நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென அரசுக்கு அழைப்பு விடுத்தனர்.

இலங்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி பொருளாதார படுவீழ்ச்சியை சந்திக்குமுன் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இச் சங்கங்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 

அருள் சத்தியநாதன்

Sat, 04/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை