CPC க்கு நாளாந்தம் ரூ.1.6 பில்லியன் நட்டம்

பாராளுமன்றில் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

 

எரிபொருள் விற்பனை மூலம் அன்றாடம் 1.6 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாக மின்சக்தி,எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, டொலரின் பெறுமதி அதிகரிப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டே நேற்று முன்தினமிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை  அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் அன்றாடம் 375 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரும் எனினும் இத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளாவிட்டால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் மேலும் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக எரிபொருள் வழங்குவது தடைப்படுமானால் மின் துண்டிப்புக்கான காலம் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அதன் மூலம் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரும் என்றும் அவர் தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று சபையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

எரிபொருள் விலையினை குறைப்பதற்கும் தடையின்றி எரிபொருளை இறக்குமதி செய்வதற்குமான யோசனையை எதிர்தரப்பினர் தாராளமாக சபையில் முன்வைக்கலாம்.

எரிபொருள் விநியோக கட்டமைப்பையும், மின்விநியோக கட்டமைப்பையும் சீராக முன்னெடுப்பதற்காகவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் லங்கா ஐ.ஓ.சி.நிறுவனமும் புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய விலைகளை நிர்ணயித்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Wed, 04/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை