ஜனாதிபதி பதவி விலகுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது

இடைக்கால அரசு ஊடாக முதலில் தற்காலிக தீர்வு - உதய கம்மன்பில

ஜனாதிபதி பதவி விலகுவது தற்போதைய பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது. நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தினூடாக தற்காலிக தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைய வேண்டுமென பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் இலங்கையரென்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்து சிறந்த தீர்வுக்காக போராடும்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலை தற்போது காணப்படுகிறது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டையும்,நாட்டு மக்களையும் மீட்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் இடைக்கால அரசாங்கத்தில் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் சாத்தியம் கிடையாது. சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக் கொள்ளாவிடின் அரசியல் செய்வதற்கும் நாடு இருக்காது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தற்போதைய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. புதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து அதனூடாக குறுகிய கால தீர்வுகாண எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும்? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொறுப்புதாரி எங்குள்ளார் என்பது கூட அறிய முடியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை காட்டிலும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது புத்திசாலித்தனமாக அமையும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை