வளமான எதிர்காலத்துக்கு புது வருடம் வழி வகுக்கட்டும்

புதுவருட செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாளைய நாள் பிறந்து, கனவுகள் நனவாக பிரார்த்திக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  அவர் வெ ளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுகத்தில் மாபெரும் கலாசார நிகழ்வாக கருதப்படும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சுபீட்சமான புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்வதே சிங்கள, தமிழ் புத்தாண்டு பிறப்பாக கருதப்படுகிறது. சிங்கள மக்களைப் போன்று தமிழ் மக்களின் பாரம்பரிய சூரிய நாட்காட்டியின் முதல் நாள் உதயமாகுவது ஏப்ரல் மாதத்திலாகும். இரு வேறு மதங்களை உருவாக்கிக் கொண்ட இரு இனத்தவர்கள் ஒன்றோடு ஒன்றாக கொண்டாடும் அபூர்வமான கொண்டாட்டமாக சிங்கள, தமிழ் புத்தாண்டை அடையாளப்படுத்த முடியும்.

இந்நாட்டு மக்கள் சித்தரை மாதத்தை சுபீட்சமான மாதமாக கருதுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மக்கள் நீண்டகாலமாக வெகு விமர்சையாக சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும், கடந்த இரு வருடங்களுக்கு முன்பிருந்து, எங்கள் நாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறந்தது பூமியின் குரலில் அல்ல. மாறாக, கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுறுத்தல்களின் குரலிலேயே பிறந்தது.செழிப்பு நிறைந்த பாடத்தை கற்றுத்தரும் சிறப்பான புத்தாண்டு, இம்முறை, எங்கள் குடிமக்களை சுத்தமான உணவை சமைக்கும் தயக்கத்துக்குள் தள்ளிவிட்டே பிறந்துள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மிக ஆபத்தான நிலைக்கு முழு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில், எங்களுடைய மக்களின் சாதாரண வாழ்க்கைத்தரம் அசாதாரண முறையில் சவாலுக்குள்ளாகியுள்ளது.

தன்னிறைவுப் பொருளாதாரம் நிறைந்த நாடாக இருந்த எங்கள் நாடு, இன்று கண்ணீர் சிந்தும் தேசமாக மாறியுள்ளதுடன், முழு குடும்பமும் மகிழ்ச்சியாக, அமைதியாக மற்றும் நிம்மதியாகவும் புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளது.ஒருபுறம் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் அலைக்கழிக்கப்படுவதுடன், மறு பக்கத்தில் இந்நாட்டு இளைய தலைமுறையினர் வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அண்மைகால வரலாற்றில் நாடாக நாம் எதிர்கொள்ளும் மிக மோசமான சூழ்நிலையின் விளிம்பிற்கு நாம் வந்துள்ளதுடன், நல்லதொரு எதிர்கால தலைமுறையினரின் கனவை நனவாக்கும் நோக்கில் எங்கள் நாட்டு மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். காலத்துக்கு காலம் பரிணமித்த மனித நாகரீகம், கலாசாரம் என்பன மனிதனை முழுமைப்படுத்தியுள்ளதுடன், அவர்களின் தேசியத்திற்கு உரித்தான கலாசார கொண்டாட்டங்களின் ஊடாக, அவர்களை நேர்மையான பாதையில் அழைத்துச் செல்கிறது. சிங்கள, தமிழ் புத்தாண்டும் இவ்வாறான பெறுமதியான விழுமியங்கள் நிறைந்த நிகழ்வாக திகழ்கிறது.

மகத்தான தியாகங்களை செய்த மக்களை மீண்டும் மீண்டும் தியாகம் செய்ய கூறுவதை விட, நடைமுறையில் ஆட்சியாளர்கள் அந்த செயற்பாட்டை முன்னெடுப்பது மிக அவசியமானது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், இந்த நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாளைய நாள் பிறந்து, கனவுகள் நனவாக பிரார்த்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Thu, 04/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை