எதனையும் மறைத்துப் பயனில்லை பிரச்சினைகளுக்கு நேரடி தீர்வே தேவை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவிப்பு

நாடு எதிர் கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பிரச்சினைகளை மறைத்து பயனில்லை என்றும் அதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுவது முக்கியமெனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை என தெரிவித்துள்ள அவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஆராய்வதே அவசியம் என்றும் நோய்க்கு சரியான மருந்தை வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கூறுவதும் பிரதமரை வீட்டுக்கு போகுமாறு கூறுவதும் நேற்று இன்று நடக்கும் விடயம் அல்ல. அன்று ஜே.ஆர். ஜெயவர்தனவை கொலை செய்வதாக கூறினார்கள். இவ்வாறான கருத்துக்களுக்கு குழப்பமடைய தேவையில்லை. எனினும் தலையிலுள்ள நோய்க்கு உடலில் மருந்து போட்டு பயனில்லை.

ஜனாதிபதியோ பிரதமரோ எதிர்க்கட்சித் தலைவரோ நேரடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறுதான் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும். எந்த பிரச்சினைகளையும் மூடிமறைத்து பயனில்லை. ஒரு நோய்க்கு பதிலாக வேறொரு நோய்க்கு மருந்து வழங்குவதில் பயனில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 04/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை